மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் 'குளோப் டிராட்டர்' பட நிகழ்ச்சி வருகிற 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

Globe Trotter event rules : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, தயாரிப்பாளர்கள் "குளோப் டிராட்டர் நிகழ்வு" ஒன்றை திட்டமிட்டுள்ளனர். இது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.

மகேஷ் பாபு-ராஜமௌலி கூட்டணியின் 'குளோப் டிராட்டர்' பட விழா இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இதில் படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியாகலாம். 'குளோப் டிராட்டர்' படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பிருத்விராஜ், பிரியங்கா சோப்ராவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்ருதி ஹாசனின் பாடல் ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ராஜமெளலி பட விழாவுக்கு இத்தனை நிபந்தனைகளா?

இந்திய சினிமாவின் மாபெரும் படைப்பாக இது உருவாகி வருகிறது. இப்படத்தை சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றது. இன்னும் படத்தின் பணிகள் எஞ்சியுள்ள நிலையில், அதன் டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு வாரணாசி என பெயரிடப்பட்டு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில், நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும் விழாவுக்கான விதிமுறைகளை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் வழிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியுமாம். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் அனுமதி இல்லை. அவர்கள் வீட்டில் இருந்தே நேரலையில் காணலாம் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.