ஒரிஜினல் தம்பதிகளான நடிகர் சரத்குமாரும் ராதிகாவும் மூன்றாவது முறையாக இயக்குநர் மணிரத்னம் படத்துக்காக வெள்ளித்திரையில் ஜோடியாகத் தோன்றவிருக்கிறார்கள். 22 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இணைந்து நடிக்கும் படம் இது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அவரது இயக்கத்தில் அல்லாமலும் சில படங்களைத் தயாரிக்கத்துவங்கியிருக்கிறது. இந்த வரிசையில் மணிரத்னத்தின்  முன்னாள் உதவி இயக்குனரும் ’படை வீரன்’ படத்தின் இயக்குனருமான தனா அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். மணிரத்னம் கதை, வசனம் எழுதும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். 

இந்த படத்தில் தான் நடிகர்  சரத்குமாரும் ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க இருக்கிறார்கள். சரத்குமார் நடிப்பில் ’அடங்காதே’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜிவி.பிரகாஷ், சுரபி நடித்துள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். 

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ராதிகாவும் சரத்குமாரும் இதுவரை ‘நம்ம அண்ணாச்சி’,’சூர்ய வம்சம்’ ஆகிய இரு படங்களில் மட்டுமே இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர்களுக்கு மூன்றாவது படம். ‘சூர்ய வம்சம்’ படம் ரிலீஸாகி 22 வருடங்கள் ஆகின்றன.