அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நடந்த தாக்குதல்; குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!
புஷ்பா 2 படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்ததற்கு நீதி கோரி அல்லு அர்ஜுனின் ஹைதராபாத் வீட்டின் மீது சில போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அவரது குழந்தைகள் அல்லு அர்ஹா மற்றும் அல்லு அயான் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் தற்போது உலக அளவில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூலை ஒருபுறம் குவித்து வரும் நிலையில், இந்த படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட துயரம் தற்போது அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
'புஷ்பா 2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் போடப்பட்டது. அப்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு வந்தார். எனவே அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பலர், அவரை பார்க்க முன்னியடித்து கொண்டு முன்னேறியதால் போலீசார் தடியடி நடத்தினர். அதே போல் அல்லு அர்ஜுன் பவுன்சர்கள் மக்களை தள்ளிவிட்டதிலும் பலர் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் 35 வயதான அல்லு அர்ஜுனின் ரசிகை ரேவதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரோமியோ - ஜூலியட் ரேஞ்சுக்கு லவ்; பப்லுவுக்கு அல்வா கொடுத்துட்டு வேறு நபரை திருமணம் செய்த ஷீத்தல்!
ரேவதியின் 8 வயது மகனும் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அந்த சிறுவன் அபாயகட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது அல்லு அர்ஜுனுக்கு எதிராக இந்த சம்பவம் திரும்பியுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லு அர்ஜுனின் ஹைதராபாத் வீடு சூறையாடப்பட்டது. அவரது குழந்தைகள் அல்லு அர்ஹா மற்றும் அல்லு அயான் ஆகியோர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆன்லைனில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அல்லு அர்ஹா மற்றும் அல்லு அயான் ஆகியோர் குடும்ப உறுப்பினர்களுடன் காரில் வீட்டை விட்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் இன்னும் இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், அன்று மாலையே ஊடகங்களிடம் பேசினார். அவர்களது வீட்டின் மீதான தாக்குதலைக் கடுமையாக விமர்சித்த அவர், இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
ரேவதி மரணம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் விடுதலை செய்யப்பட்டாலும் ஒரு நாள் சிறையில் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.