வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று என்று அல்ட்ரா மாடர்னாக மாறினாலும் போலிச் சாமியார், மந்திரவாதி, ஜோதிடர்களிடம் ஏமாறுவதில் மக்கள் என்றுமே சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக சிறப்பான சம்பவம் ஒன்று அண்மையில் மதுரையில் நடந்தேறியுள்ளது.

மதுரை மந்திகுளம் பகுதிக்கு பாலசுப்ரமணியன் என்ற ஜோதிடர் ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத்துடன் குடிவந்தார். அங்குள்ள மக்களை உறவு முறை சொல்லி அழைத்து அனைவரிடமும் இணக்கமாக பழகியுள்ளார்.  தன்னிடம் மாந்திரீக சக்தி இருப்பதாக கூறி கற்பூரத்தை கையில் வைத்து கொளுத்தி வாயில் போட்டு விழுங்கி சாமி வந்தது போல் நடிப்பதையும் வழக்கமாக்கி உள்ளார்.

தன்னிடம் குறி கேட்கவருபவர்களிடம் ’சாமியிடம் என்ன வேணும் கேள்’ என்று கூறி அவரே, பணம் வேண்டுமா என்று கூறியவாறு மந்திரத்தில் இருந்து சில  ஆயிரம் ரூபாயை வரவைத்து கொடுப்பது போல குறிகேட்க வந்தவர்களிடம் கொடுத்து ஆசையை தூண்டி விட்டுள்ளார். இதனால் அவரை சக்தி மிக்க மந்திரவாதியாக அந்த பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.

இன்னொரு பக்கம் தனது மகன் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதாகவும், தனக்கு மேல்மட்ட அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் மிகவும் நெருக்கம் எனவும் கதை அளக்கத்துவங்க அந்த ஏரியாவில் அவரது செல்வாக்கும் , சொல்வாக்கும் கொடிகட்டிப் பறந்தது.

இதனை தொடர்ந்து தன்னிடம் குறி கேட்க வந்தவர்களிடம் மந்திரவாதி பாலசுப்ரமணியன் சாமி அருள் வாக்கு சொல்வது போல பேசி உள்ளார். உன் கஷ்டத்தை போக்க சாமி பணம் கொடுத்து உதவ கூறியுள்ளார் என்றும் தன்னிடம் குட்டிச்சாத்தான் மகிமையினால் மூட்டை மூட்டையாக பணத்தை கொட்டிக் கொடுக்கும் அதிர்ஷ்ட பீரோ உள்ளது என்றும் அதை 45 நாட்கள் வீட்டில் வைத்து பூஜை செய்த பிறகு தான் சொல்லும் நேரத்தில் திறந்து பார்த்தால் பல கோடி பணம் இருக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

ஒரு சிலரிடம் அந்த பீரோவுக்குள் சாக்கு மூட்டை நிறைய பணம் இருப்பதை காட்டி ஆசையை தூண்டியுள்ளார். இதனை உண்மை என நம்பி அப்பகுதி மக்கள் வட்டிக்கு கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும், 2 லட்சம் ரூபாய் முதல் , 5 லட்சம் ரூபாய் வரை ஆளுக்கு தகுந்தாற்போல் பணத்தை அவரிடம் கொடுத்து பீரோவை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்துள்ளனர். இந்த வசூல் சுமார் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

ஜோதிடர் கொடுத்த 45 நாள் கெடு முடிந்த பிறகும் பீரோவைத் திறக்க ஜோதிடர் அனுமதிக்காததால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் அவரை நெருக்கவே ‘கடைசியாக இன்று இரவு ஒரு சிறப்பு பூஜை செய்யப்போகிறேன். அது முடிந்ததும் நாளை காலை நீங்கள் பீரோவைத் திறக்கலாம்’ என்று சொன்னபிறகு அன்று இரவே மதுரையை விட்டே எஸ்கேப் ஆகிவிட்டார் ஜோதிடர்.

மறுநாள் காலை பீரோவைத் திறந்து அதில் சில்லரை நாணயங்கள் கூட இல்லாததைக் கண்டு ஏமாந்த பொதுமக்கள் வழக்கம்போல் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி போலிஸில் புகார் செய்துள்ளனர்.