தக் லைஃப் திரைப்படத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டமில்லை என தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Producer Dhananjayan Says about Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன தக் லைஃப் திரைப்படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது. நெட்டிசன்களும் இப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து மீம்ஸ் போட்டு வந்தனர். இதனால் இப்படத்தின் வசூலும் கடும் சரிவை சந்தித்தது. இப்படம் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. அதுமட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்கள் கமலிடம் பணத்தை திருப்பி கேட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ள தனஞ்செயன், கமலிடம் தியேட்டர் ஓனர்கள் படத்தை திருப்பி கேட்டதாக கூறப்படுவது உண்மையில்லை. நாங்களும் இரண்டு ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்திருக்கிறோம். நாங்க படம் ரிலீஸ் ஆகும் முன்னர் ரெட் ஜெயண்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தோம். படம் எவ்வளவு கலெக்‌ஷன் பண்ணியதோ, அதில் மீதி பணத்தை அவர்கள் திருப்பி தந்துவிடுவார்கள். அவ்ளோதான். இதுல என்ன நஷ்டம். உதாரணத்திற்கு நாங்க 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறோம் என்றால், படம் ரிலீசுக்கு பின் 4 லட்சம் தான் வசூல் ஆனது என்றால் 6 லட்சம் திருப்பி வந்துரும்.

ரெட் ஜெயண்டிடம் அந்த பணத்தை திருப்பி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் அடுத்தடுத்த படம் ரிலீஸ் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதில் அட்ஜஸ்ட் செய்துகொள்வோம். ஆனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் தக் லைஃப் மூலம் வரவில்லை என்பதே திரையரங்குகளுக்கு ஒரு பின்னடைவு.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

மே மாதத்தை பொருத்தவரை ரெட்ரோ, அதன் பின் டூரிஸ்ட் பேமிலி பிரமாதமாக வசூல் செய்தது. பின்னர் மாமன் திரைப்படம் கொஞ்சம் நல்லா வசூல் செய்தது. ஆனால் மே மாதம் பெரியளவில் எதிர்பார்த்த கலெக்‌ஷன் வரவில்லை. எல்லா படங்களுமே மீடியமான கலெக்‌ஷன் தான். அது தமிழ் சினிமாவை காப்பாற்றாது. சராசரியாக ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் மினிமம் 250 கோடி ரூபாய் வசூல் வந்தால் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும். 250 கோடி வந்தால் தமிழ் சினிமா நல்லா இருக்கும்.

ஒரு வாரத்திற்கு 50 முதல் 60 கோடி வந்தால் தான் இண்டஸ்ட்ரி நல்லா இருக்கும். இந்த ஜூன் மாதத்தை பொருத்தவரை இப்போ 3 வாரங்கள் ஆகப்போகிறது. தற்போது வரை மொத்தமாகவே 70 கோடி கூட வரவில்லை. இதனால் சினிமாவை நம்பி இருப்பவர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது அனைவரும் நம்பி இருப்பது வருகிற 20ந் தேதி ரிலீஸ் ஆகும் குபேராவும், டிஎன்ஏ படமும் நல்லா போகும் என்றுதான். அதன் மூலம் நல்ல வசூல் வரும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக 27ந் தேதி விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படம் ரிலீஸ் ஆகிறது. இவையெல்லாம் நல்ல வசூலை கொண்டுவந்தால் இந்த மாதத்திற்கு ஓரளவுக்கு சமாளிக்கலாம். திரையரங்க உரிமையாளர்கள் கரண்ட் பில் கட்டணும், சம்பளம் கொடுக்கணும் இதெல்லாம் படம் நல்லா ஓடுனா தான் செய்ய முடியும். திரையரங்குகளின் பிரச்சனை ரொம்ப பெருசு. அவங்களுக்கு கிராஸ் கலெக்‌ஷன் வரவில்லை என்றால், அவர்களுக்கு ஷேர் தொகை வராது. ஷேர் வரவில்லை என்றால் அவர்களால் தியேட்டரை ஓட்ட முடியாது. ஆடியன்ஸ் தியேட்டருக்கு வரவில்லை என்றால் கேண்டின் மூலம் கிடைக்கும் வருவாய் வராது, பார்க்கிங் வசூல் வராது எல்லாமே பிரச்சனை ஆகிவிடும்.

தக் லைஃப் படத்தால் கமலுக்கு சம்பளம் கூட கிடைக்கவில்லை

தக் லைஃப் ஒரு கூட்டு முயற்சியாக பண்ணிய படம். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகியோர் தயாரிப்பாளர்களாக இணைந்து எடுத்துள்ளனர். ரெட் ஜெயண்ட் இதில் தயாரிப்பாளர் இல்லை. ஆனால் ஒரு முதலீட்டாளராக இருந்துள்ளனர். இப்படத்திற்காக பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் கமல்ஹாசன், மணிரத்னத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்திருக்கிறார். அது திருப்பி வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கமல் சாருக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காது. இந்த படத்தில் பணியாற்றிய மற்றவர்களுக்கெல்லாம் சம்பளம் வந்துவிட்டது. ஆனால் கமல் சார் 2 வருஷம் உழைச்ச உழைப்பு ஊதியம் கிடைக்கவில்லை என தனஞ்செயன் கூறி உள்ளார்.

கமல்ஹாசன் இல்லாமல் இந்த தக் லைஃப் படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரித்திருந்தால் நிச்சயம் நஷ்டம் அடைந்திருக்க கூடும் என கூறிய தனஞ்செயன், அதற்கான காரணத்தையும் கூறினார். அது என்னவென்றால், கமல்ஹாசன் வேறு ஒருவர் தயாரிப்பில் நடித்திருந்தால் 150 கோடி சம்பளம் கேட்டிருப்பார். அந்த சம்பளத்தை கொடுத்துவிட்டு அதை மீட்க முடியாமல் போயிருக்கும். ஆனால் தக் லைஃப் படத்தை கமல்ஹாசனே தயாரித்ததால் அவர் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தார். அப்படம் லாபம் அடைந்திருந்தால் அதில் அவருக்கு நல்ல வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கு ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மூலம் வந்த தொகையை வைத்து தயாரிப்பு செலவை சரிகட்டிவிட முடியும். ஆனால் அவருக்கு சம்பளம் என எதுவும் கிடைக்காது என கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி யூடியூப்பில் படு வைரலாகி வருகிறது.