நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் விதிகளை மீறிய கட்டுமானங்கள் இருந்ததால், மாநகராட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  விஜய் நடித்து 2002ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா, ஹிந்தியில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமடைந்தார். தற்போது, ஹாலிவுட் படங்களில் நடித்து பல கோடி சம்பளம் பெற்றுவரும் பிரியங்கா சோப்ராவுக்கு மும்பையின் அந்தேரி பகுதியில் பிரமாண்ட வணிக வளாகம் ஒன்று உள்ளது. வணிக வளாகத்தில் பல கடைகளை வாடகைக்கு விட்டுள்ள அவர், தனது அலுவலகத்தையும் அங்கேயே வைத்துள்ளார். திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், கால்சீட் ஒப்பந்தம், சம்பள பேச்சுவார்த்தை என சகலத்துக்கும் அந்த அலுவலகத்தையே பயன்படுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, சில ஜோதிடர்களின் பேச்சை நம்பியதால், தற்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். 

பிரியங்கா சோப்ராவை அணுகிய சில ஜோதிடர்கள், அந்த வணிக வளாகத்தில் வாஸ்துபடி சில மாற்றங்களை செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர், வணிக வளாகத்தில் விதிகளை மீறி சில கட்டுமானங்களை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல், அவர் வாடகைக்கு விட்டுள்ள மற்றொரு கட்டிடத்தில் சரிஸ்மா பியூட்டி ஸ்பா அண்ட் சலூன் என்ற பியூட்டி பார்லரின் வெளியிலும் சில மாற்றங்களை செய்துள்ளார். இதை கவனித்த பொதுமக்கள் பலர், அதை கண்டுகொள்ளாத நிலையில், சிலர் மட்டும் மும்பை மாநகராட்சியில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்த பியூட்டி பார்லருக்கு வந்த மாநகராட்சி ஊழியர் ஒருவரும் அதேபோல் புகார் அளித்தார். இதையடுத்து, பிரியங்கா சோப்ராவின் வணிக வளாகத்துக்கு வந்து பார்வையிட்ட மாநகராட்சி அதிகாரிகள், விதிமீறலை உறுதி செய்து, அதற்கு அபராதம் விதித்தனர். மேலும், விதிமீறிய கட்டுமானங்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டனர். 

ஆனால், அதை பிரியங்கா சோப்ரா இதுவரை கண்டுகொள்ளவில்லை என்றும், அபராதத்தையும் செலுத்தவில்லை எனக் கூறியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா அதன்பிறகும் விளக்கம் அளிக்காமலும், அபராதத்தை செலுத்தாமலும் இருந்தால் நாங்களே அந்த விதிமீறிய கட்டுமானங்களை இடித்து அகற்றுவோம் என எச்சரித்துள்ளனர்.