தமிழகம் மற்றும் பெங்களுருவில் 8 கிளைகளை கொண்ட ஒரு தனியார் நிறுவனம், வருகின்ற 10ம் தேதி சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் விடுமுறை அளித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற வியாழக்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் பெரிய அளவில் நடந்து வரும் நிலையில், நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் ஒளிபரப்பப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய ஜெயிலர் படம் வெளியாவதை தொடர்ந்து ஒரு ஆச்சரியமான முடிவை எடுத்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் குவிவதை தடுக்க, ஆகஸ்ட் 10ம் தேதி எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
மேலும் எங்கள் பணியாளர்களின் சிரமத்தை குறைக்க, அவர்கள் அனைவருக்கும் ஜெயிலர் படத்திற்கான இலவச டிக்கெட்களையும் நாங்கள் வழங்குகின்றோம் என்றும் அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
"எங்கள் தாத்தாவுக்கும், எங்கள் அப்பாவிற்கும், எங்களுக்கும், எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
