ஆதிபுருஷ் படம் பார்த்துவிட்டு வந்து நெகடிவ் ரிவ்யூ கொடுத்தவரை பிரபாஸ் ரசிகர்கள் அடிக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இராமாயணத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் இன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இப்படத்திற்கு அதிகாலை காட்சி திரையிட அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும், தெலுங்கானாவில் இப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் காலை முதலே குவிந்த ரசிகர்கள், தியேட்டர் முன் ஆடிப்பாடி கொண்டாடியதோடு, நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

இதையும் படியுங்கள்... பிரபாஸ் ராமனாக அதகளப்படுத்தினாரா? அப்செட் ஆக்கினாரா? - ஆதிபுருஷ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ

இப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. குறிப்பாக இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் படுமோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிலரோ இதற்கு கார்ட்டூன் படங்களே பரவாயில்லை என சொல்லும் அளவுக்கு படம் மோசமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கடுப்பாகிப் போய் உள்ளனர்.

Scroll to load tweet…

இந்த நிலையில், ஆதிபுருஷ் படத்தின் முதல் ஷோ பார்த்த ஒருவர், படம் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், மொக்கையாக இருப்பதாகவும் தியேட்டர் முன் வந்து விமர்சனம் செய்துகொண்டிருந்தார். இதைக்கேட்டு கடுப்பான பிரபாஸ் ரசிகர்கள், அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், கைகலப்பு ஏற்பட்டது. நெகடிவ் விமர்சனம் கொடுத்த நபரை தரதரவென இழுத்துபோட்டு பிரபாஸ் ரசிகர்கள் சாத்தி உள்ளனர். அவர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த குரங்கு - வைரலாகும் வீடியோ