பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14ம் தேதியும் வெளியாக உள்ளது. இதையடுத்து திரையுலகினரின் நீண்ட நாள் கோரிக்கையான தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அனுமதி அளித்தது. 

இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கம்யூனிட்ஸ்ட் மாநிலச் செயலாளர் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜனவரி 10ந் தேதி முதல், 100 சதவிகித இருக்கைகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோய் பரவல் இன்னமும் நீடிக்கும் நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவு பொருத்தமற்றதாகும் என்பதோடு, திரையரங்கிற்கு செல்லும் பார்வையாளர்களுக்கு வேகமாக கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கான காரணமாகவும் இது அமைந்து விடும்.

 மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து இன்னமும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. பொது நிகழ்ச்சிகள், அரங்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் பொழுது போக்கிற்காக மக்கள் செல்லும் திரையரங்கத்தில் மட்டும் 100 சதவிகித இருக்கைகளுடன் அனுமதிப்பது எனும் தமிழக அரசின் முடிவு அறிவியல் பூர்வமானதல்ல என்பதோடு, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் குளிரூட்டப்பட்ட அரங்கில் மக்கள் நெருக்காக அமர்ந்திருப்பதால் கொரோனா நோய்த் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அறிவுறுத்தலையும் மீறுவதாகும். 

மேலும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் இத்தகைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக மருத்துவர் ஆலோசனைக்குழுவும் இதை சிபாரிசு செய்யவில்லை. எனவே, தமிழக அரசு  திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி என்ற தனது முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.