பிரபல இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக... கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற, பிசாசு படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். ’பிசாசு 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார் மிஷ்கின்.

இந்த படத்தில் இடம்பெற உள்ள பாடல்களின் கம்போஸிங் பணிகள் தொடங்கிவிட்டதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் பேசி கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிசாசு முதல் பாகம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தை எப்படி வித்தியாச படுத்தி காட்டுவார் மிஷ்கின் என்கிற பலத்த எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் உள்ளது.