அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற ஊரோரம் புளியமரம் பாடலைப் பாடிய பாடகி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 75.

Singer Lakshmi Ammal Passes Away : தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கு உயிரூட்டிய மூத்த நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் (75) இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தென் மாவட்டங்களில் மேடை நிகழ்ச்சிகள் வழியாகப் பெரும் புகழ் பெற்ற ஒரு முக்கியமான நாட்டுப்புறக் கலைஞராக அறியப்பட்டவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நூற்றுக்கணக்கான கிராமியப் பாடல்களை மேடைகளில் பாடி மக்களை ஈர்த்த லட்சுமி அம்மாளை, திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அமீர். 2007-ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில், கார்த்தி மற்றும் சரவணன் நடனமாடிய “ஊரோரம் புளியமரம்” பாடலுக்கு அவர் அளித்த குரல், உலகத் தமிழர்கள் மத்தியில் அவரை பரவலாக அறிமுகப்படுத்தியது.

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் மரணம்

அந்தப் பாடலில் ஒலித்த அவரது இயல்பான குரல் வளமும், கிராமிய மணம் கமழும் பாடல் சொல்லும் பாணியும், பாடலை காலம் கடந்தும் நினைவில் நிற்கச் செய்தது.

சமீப காலமாக முதுமை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் பலரும், திரைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கிராமிய இசையின் ஒரு முக்கியமான குரலாக இருந்து வந்தவர் லட்சுமி அம்மாள், அவரது இழப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.