- Home
- பொழுதுபோக்கு
- Pradeep Rangathan Film Update : மீண்டும் இணையும் Dude ஜோடி! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Pradeep Rangathan Film Update : மீண்டும் இணையும் Dude ஜோடி! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Pradeep Rangathan Film Update : தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதைக் கவர்ந்து முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இப்போது இவர் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருவது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தொடர் வெற்றிகளும் பாக்ஸ் ஆபீஸ் சாதனையும்
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப், அடுத்ததாகத் தானே இயக்கி, நாயகனாக நடித்த 'லவ் டுடே' படத்தின் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் தன் பக்கம் திருப்பினார்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த 'டிராகன்' மற்றும் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்த 'டியூட்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து இமாலய வெற்றி பெற்றன. தான் கதாநாயகனாக நடித்த முதல் மூன்று படங்களுமே ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்ததால், கோலிவுட்டில் பிரதீப்பின் மார்க்கெட் மதிப்பு மளமளவென உயர்ந்தது. இதன் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியது.

அடுத்தடுத்த மெகா புராஜெக்ட்டுகள்
இதற்கிடையே, ஏஜிஎஸ் (AGS) என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கவுள்ளதாகவும், அவரே அதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தயாரிப்பாளராக புதிய பயணம்
இந்நிலையில், திரைத்துறையில் இயக்குநர் மற்றும் நடிகராகத் தடம் பதித்த பிரதீப், தற்போது தனது அடுத்த பரிமாணமாகப் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைச் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்திற்கான வேலைகளையும் அவர் முழுவீச்சில் ஆரம்பித்துள்ளார்.
மமிதா பைஜூ
தளபதி விஜய்யின் வெளிவரவிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பார்வையை ஈர்த்த மமிதா பைஜூ, இந்த புதிய திரைப்படத்தில், கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'டியூட்' திரைப்படத்திற்கு பின்னர் அவர் பிரதீப்புடன் இணைந்துள்ளார். தற்போது இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எவ்வித ஆரவாரமும் இன்றி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்கம், நடிப்பு எனப் பன்முகத்திறமை காட்டி வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளர் அவதாரம எடுத்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

