சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் தான் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம்.

Allu Arjun Next Movie : கடந்த 10 ஆண்டுகளில் மலையாள சினிமாவில் பேசில் ஜோசப்பைப் போல அதீத வளர்ச்சி அடைந்தவர் யாரும் இல்லை. மின்னல் முரளி மூலம் அனைத்து இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த பேசில், தற்போது நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பொன்மான் போன்ற படங்கள் OTT தளங்களில் வெளியாகி பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்தன. இயக்குநராக பேசிலின் அடுத்தடுத்த படங்கள் குறித்து பல செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது அவற்றில் ஒன்றைப் பற்றி தான் பார்க்க உள்ளோம்.

அல்லு அர்ஜுனின் அடுத்த பட இயக்குனர் யார்?

அல்லு அர்ஜுனை பேசில் ஜோசப் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தெலுங்கு ஊடகங்களில் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதிக VFX காட்சிகள் கொண்ட இந்தப் படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். அவரது அடுத்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் தற்போது ஜூனியர் என்.டி.ஆருக்குச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அட்லீ படத்திற்குப் பிறகு, பேசில் ஜோசப்பின் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. பேசில் ஜோசப் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்து வருகிறார். மின்னல் முரளி மூலம் புகழ் பெற்ற பேசில் ஜோசப்புடன் தங்கள் அபிமான நடிகர் இணைவதைப் பார்க்க ஆவலாக உள்ளதாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

VFX காட்சிகளுக்கு மட்டும் 250 கோடி

அல்லு அர்ஜுனின் 22-வது படமும், அட்லீயின் 6-வது படமுமான AA22xA06 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஃபேண்டஸி கதையாகக் கருதப்படும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒன்று அனிமேஷன் கதாபாத்திரமாக இருக்கலாம். ஜவான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லீயும், புஷ்பா பட நாயகனும் இணையும் இப்படத்தின் பட்ஜெட் 700 கோடி என்று முன்னர் செய்திகள் வெளியாகின. 200 கோடி தயாரிப்பு செலவில் உருவாகும் இப்படத்தின் VFX காட்சிகளுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் செலவிடுகிறதாம் சன் பிக்சர்ஸ்.