Asianet News Tamil

கற்புக்கு கண்ணகி... காதலுக்கு ஜானகி... தேவன் வந்து பாடுகின்றான்..!

நாதஸ்வர வாத்தியம் முழங்க அவனும் அவளும் ஊர்வலம் வருகின்ற தருணம். மகிழ்ச்சியில் அவன் பாடுகிறான்; ஆனந்தத்தில் அவள் ஆடுகிறாள். 
 

old film song beauty and depth part-23 baskaran krishnamurthy
Author
Tamil Nadu, First Published May 1, 2020, 6:43 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திரைப்பாடல் - அழகும் ஆழமும்-23: 2. இதுபோல் ஒன்று இனி வருமா..? தமிழ் திரையின் பொற்காலம் அது. ஒவ்வொரு படத்தின் ஒவ்வொரு பாடலும் 
எளிய தமிழில் இனிய இசையில் தமிழர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி இருந்த நாட்கள் அவை. பாடல்களின் சொற்களில் ஓசை நயம் இயல்பாகவே அமைந்து இருந்தது. 
போதாதற்கு இசை அமைப்பாளர் வேறு, இசைக் கருவிகளில் அட்டகாசம் செய்வார். 

இத்துடன் நிறைவடைந்து விடுமா..? அதுதான் இல்லை.பின்னணிப் பாடகர்கள் வேறு... தம் பங்குக்கு, அமுதையும் தேனையும் குழைத்துக் குழைத்துச் சேர்த்து தரும் போது... அடடா..! தேவன் வந்து பாடுவது போல், தேவி நடம் ஆடுவது போல் இருக்கும். 1968இல் வெளிவந்த படம் 'பூவும் பொட்டும்'. பெயருக்கு ஏற்றாற் போலவே மங்களகரமான குடும்பச் சித்திரம். அவள் அவனை விரும்புகிறாள். அவனைப் பற்றி எண்ணியவாறே உறங்கி விடுகிறாள். உதயம் ஆகிறது இனிமையான திருமணக் காட்சி. 

நாதஸ்வர வாத்தியம் முழங்க அவனும் அவளும் ஊர்வலம் வருகின்ற தருணம்.மகிழ்ச்சியில் அவன் பாடுகிறான்; ஆனந்தத்தில் அவள் ஆடுகிறாள். அழகும் எழிலும் தமிழும் இசையும் கலந்து ஒரு அற்புத ஆனந்த அனுபவம் தருகிறது அந்தக் காட்சியும் அந்நேரப் பாடலும் இளம் முறுவலுடன் பாரதி - காட்சிக்கு அழகு ஊட்டுகிறார்.  
இனிமையாய்க் குழைந்து குழைந்து சிலிர்க்க வைக்கிறார்கள்.பாடகர்கள் - டி.எம்.சௌந்தராஜன் - பி. சுசீலா. இசை அமைப்பு- ஆர். கோவர்த்தனம்.

இத்தனைக்கும் மேலாய், தமிழ் மொழியின் இனிமையை மொத்தமாய்ப் பாடல் வரிகளில் இறக்கி வைத்து இலக்கியப் புகழ் ஈட்டுகிறார் - கவியரசு கண்ணதாசன். இதுவன்றோ தமிழ்..! இதுவன்றோ இசை..! இதுவன்றோ இனிமை...!கேட்கக் கேட்கப் பரவசம் ஊட்டும் இந்தப் பாடல், தமிழ் திரை தந்த பொக்கிஷங்களில் ஒன்று. 

இதோ பாடல் வரிகள்:

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான். 
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள். 

கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில் 
மாலையிட்ட பூங்கழுத்தில் தாலிகட்டும் வேளையிலும்
ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும்பொழுதும் 
தேவன் வந்து பாடுகின்றான் தேவி நடம் ஆடுகின்றாள். 

மைவடித்த கண்ணிரண்டும் மண்பார்க்கும் பாவனையில் 
கைப்பிடித்த நாயகனின் கட்டழகைக் கண்டுவர
மெய்சிலிர்த்து முகம்சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே 
தேவி நடம் ஆடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான். 

கற்பில் ஒரு கண்ணகியாய் காதலுக்கு ஜானகியாய்
சிற்பமகள் வாழ்க வென்று தேவன் வந்து பாடுகின்றான். 
பத்தினியைக் காவல் கொண்டு பார்புகழ வாழ்க என்று 
சத்தியத்தின் மேடையிலே தேவிநடம் ஆடுகின்றாள். 

நாதஸ்வர ஓசையிலே...

 

(வளரும்.

 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

இதையும் படியுங்கள்:-

1.இந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக காற்றினிலே வந்த கீதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி..!

2.குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு - அதை குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு...?

3.இழந்த சிறகை இணைக்க எண்ணி கைகளை நீட்டிய குழந்தை..!

 

Follow Us:
Download App:
  • android
  • ios