திரைப்பாடல் - அழகும் ஆழமும் -14- காரைக்கால் அம்மையார். 

தமிழ் - நாவன்மை கொண்டவர்களுக்கு வேண்டுமட்டும் தீனி போடுகிற மொழி. இசை நயம், ஓசை வளம் கொண்ட மொழியைச் சிலரால் மட்டுமே திறம்படக் கையாள முடிகிறது. தமிழ்த் திரையில், பாடல்கள் இயற்றுவதில் கண்ணதாசன், வசன உச்சரிப்பில் சிவாஜி கணேசன் என்றால், தனது கணீர் குரலால் தமிழின் கம்பீரத்தை முழுமையாகக் கொண்டு வந்தவர் - 
அமரர் கே.பி.சுந்தராம்பாள். 

ஔவையார் என்று சொன்னால் இந்த அம்மையார் நினைவுதான் வரும். அந்த அளவுக்குத் தனது தோற்றத்தால், தவ வாழ்க்கையால் தமிழ் உள்ளங்களைக் கவர்ந்த அம்மையார் நடித்த படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே தமிழ் மொழியின் செறிவை முற்றிலுமாக வெளிக் கொணர்ந்தவை. 

'ஞானப் பழத்தைப் பிழிந்து...' 'ஒன்றானவன் உலகில் இரண்டானவன்..' பழம் நீயப்பா..' என்று அடுக்கடுக்காய் பக்திப் பாடல்களாகப் பாடி, தன் குரல் வழியே, ஆன்மிகம் வளர்த்த பெருமாட்டி - கே.பி.எஸ். அம்மையார். ஏ.வி.எம். தயாரிப்பான 'ஔவையார்' பலருக்கும் தெரியும். இதேபோன்று மற்றொரு திரைப்படம் - 1973இல் வெளிவந்த, 'காரைக்காலம்மையார்'. திரைக்கதை - வசனம் - டைரக்க்ஷன்.... கே.பி.நாகராஜன். (வேறு யாராக இருக்க முடியும்..?)  இசை - வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன். 

இப்படத்தில் ஒரு பாடல் - 'தகதக தகதகவென ஆடவா..'ஆடுவது போலவும் துள்ளிக் குதிப்பது போலவும் தமிழ்ச் சொற்கள் உண்மையில் ஆனந்தக் கூத்தாடும். ஹூம்...! இப்படி எல்லாம் அழகு தமிழ் தந்த திரைத்துறை, இன்று..?  இப்படத்தின் பாடல்களை கண்ணதாசன், கே.டி. சந்தானம் இயற்றி இருக்கின்றனர். கேட்கும் தோறும் உள்ளத்தை உருக்கும் பக்தி கானத்தின் வரிகள் இதோ:  
   
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி - இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே.. (2)
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா... 
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி...
தமிழமுதைப் படித்த நான் பாடும் படி

தகதக தகதகவென ஆடவா – சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா 
தகதக தகதகவென ஆடவா – சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….

ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நித்திய காவலனே (2)
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே
ஆனந்தத் தாண்டவம் ஆடிட வந்தவனே... (2)

முத்துக்கொடி சக்திக் குலமகள்
வித்துக்கொரு வெள்ளம் துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட

தித்திப்பது இறைவன் பெயரென
பற்றுந்தரும் பரமன் துணையென
சுற்றத்தொடு மனிதர் குலமொரு இசைபாட

கற்றுத்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப்புகழ் பெறுவார் அவர்கள் உறவாட

திக்குப் பல திமிதிமிதிமி என
தக்கத்துணை தகதக தகவென
தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயங்கியே உலகாளவா

அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீயாடவா

சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ (2)
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…..  (2)

உலகத்து நிதியே சமயத்தின் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே.. (2)

ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
நாதகீத போதவேத பாவ ராக தாளமோடு... (2)
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட………

தகதக தகதகவென ஆடவா - சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா 
தகதக தகதகவென ஆடவா - சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….  (3)

(வளரும்.
 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
இதையும் படிங்க:-
1.சொற்களால் குதூகல ஆட்டம் போட வைத்த கண்ணதாசன்... மெட்டுப்போட்டு தேடி வர வைத்த எம்.எஸ்.வி..!
2.சுயநலம் பெரிதா..? பொதுநலம் பெரிதா..? மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா..?
3.தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டிலே... ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை..!