உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்... அன்றே சொன்ன கண்ணதாசன்..!
'இப்போது நடப்பது எதுவுமே சரியில்லை' என்று புலம்புகிறவர் மத்தியில், இப்படி ஒரு சிந்தனையாளன்!
திரைப் பாடல் - அழகும் ஆழமும்-1
2. புதுப்புது உலகம்!
அவன் ஒரு கோமாளி. அப்படித்தான் நடந்து கொள்கிறான். ஆனால், அவனுள் இருக்கும் நல்மனம், அவனின் திறமை... குழந்தைகளுக்குக் கடத்துகிறான் - தனது எண்ணங்களை. தன்னம்பிக்கை' என்கிற பெயரில் அறிவுக்குச் சற்றும் ஒவ்வாத வறண்ட கற்பனைகளை விற்பனை செய்பவர்கள் ஏராளம். 'உலகம் உன் கையிலே... வானம் உன் பையிலே..' என்றெல்லாம் வெற்று வாசகங்களால் வாய் ஜாலம் காட்டுபவன் அல்லன் அவன்.
தான் நேசிக்கும், தன்னை நேசிக்கும் சிறுவர்களை, அவர்களின் மனம் கவர்ந்த வழிகாட்டியை, அழைத்துக் கொண்டு, 'வான வேடிக்கை' காட்டுகிறான். பலூன்களில் பறக்கிறார்கள் அந்தரத்தில். சூழலுக்கு ஏற்ப, பாடல் பிறக்கிறது. எளிமையான சொற்களில் புதுப்புது உயரங்களை எட்டுகிறான் கவிஞன். நமது கண்ணதாசன்.
'வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு"
தனது உற்சாக வார்த்தைகளால், உலகப் பொதுமறையை சிறுவருக்கு விவரிக்கிறான். எங்கு இருந்த போதும் சீரிய சிந்தையால் உயர்வோம் என்கிறான். நடப்பு நிகழ்வுகளோடு கலந்து நம்பிக்கை ஊட்டுகிறான். நம்பிக்கையும் துணிவும் இருந்தால் போதும் - எந்த உயரமும் எட்டி விடக்கூடியதே. குதூகலத்துடன் குதித்து மகிழ்ந்து, வாழ்வின் ஆதார அறிவைப் பெறுகிறார்கள் சிறுவர்கள்.
போகிற போக்கைப் பார்த்தால், பலூன், விமானம், ராக்கெட் எதற்கும் தேவை இல்லாமல் மனிதனுக்கே இறக்கை முளைத்து விடும் போல் இருக்கிறது என்று சொல்கிறான். 'இப்போது நடப்பது எதுவுமே சரியில்லை' என்று புலம்புகிறவர் மத்தியில், இப்படி ஒரு சிந்தனையாளன்! வாழ்க கவிஞர்!
1969இல் வெளிவந்த படம் - சாந்தி நிலையம். நகைச்சுவை நாயகன் நாகேஷ், அதிகம் 'அலட்டிக் கொள்ளாமல்' அநேகமாக 'நின்ற இடத்தில்' பாடியது இப்பாடல். 'அறிமுகப் பாடகர்' தந்த 'இயற்கை எனும் இளைய கன்னி' பெற்ற வெற்றியில், இப்பாடல் அதிகம் 'வானத்தில் பறக்காமல்' போனது. ஆனாலும், ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உற்சாகம் கொப்பளிக்கத் தவறுவதே இல்லை.
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடல் வரிகள் இதோ:
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்
உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்
நடக்கும் கதைகளைப் பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும்.
ரட்சர்கள் அனுப்பிய தூது ராக்கெட் என்பது பேரு
சிஷ்யர்கள் அனுப்பிய தூது தெரியுது வானத்தில் பாரு.
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
என்றும் ரசிக்கப்படும் பழைய திரப்படப்பாடல்களில் அழகும், கற்பனையும் வார்த்தைகளில் வளமையும் மிகுந்திருக்கும். மேலோட்டமாக பார்த்தால் ரசிக்கவும், ஆழமாக பார்த்தால் சிந்திக்கவும் வைக்கும் அந்தக்காலத்துப் பாடல்கள். அப்படிப்பட்ட பாடல்களில் பொதிந்திருக்கும் அழகையும், ஆழத்தையும் மூன்றாம் கோணத்தில் பதிவு செய்கிறார் எழுத்தாளர் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி. இந்தப்பகுதி நமது தமிழ் ஏசியநெட் இணையத்தில் அத்தியாயங்களாக வெளி வருகிறது