odavum mudiyaathu oliyavum mudiyaathu sivakarthikeyan encourage the team
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு என்று கூறலாம்.
இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

'கிளாப்போர்டு' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'. நடிகர் - தயாரிப்பாளர் சத்யமூர்த்தியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார்.

சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தை, 'எரும சாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

"சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று இருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயன் சாருக்கு, எங்களின் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த கொள்கிறோம்" என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், நடிகருமான சத்யமூர்த்தி.
