சினிமாவின் தலையெழுத்தை திருத்தி எழுதிய  துடிக்கும் கரத்துக்கு சொந்தக்காரர் ரஜினிகாந்த். ஆம், சிவப்பு நிற  தோலின் பின்னே ஓடிக் கொண்டிருந்த சினிமாவை ‘கருப்பும் கலக்கலான கலர்தான்டா கண்ணா!’ என திருத்திக் காட்டியவர் சூப்பர் ஸ்டார்தான். கே.பாலசந்தர் அவரை நம்பி முக்கிய கதாபாத்திரத்தை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கொடுத்தார். அது, நாயகி ஸ்ரீவித்யாவின் கணவர் பாத்திரம். பட ஷூட்டிங்கின் போது ரஜினிக்கு என்னதான் மேக் - அப் போட்டாலும் அவரது கருப்பு நிற கலரே தூக்கலாக தெரிந்தது. யூனிட்டில் சிலர்  அவரைப் பார்த்து நக்கலாக சிரித்தனர். தாங்கிக் கொண்டார், வேதனையுடன். ஆனால் அடுத்த சில வருடங்களில் அந்த கருப்பு நிற கலருக்கும், காந்த கண்களுக்கும் பின்னால் தென்னிந்திய இளம் பெண்கள் அலைபாய்ந்தனர்.

ரஜினியுடன் நடிக்க கோலிவுட்டில் துவங்கி பாலிவுட் நடிகைகள் வரை போட்டி போட்டனர். ரஜினியுடன் ஜோடி போட்ட பவுடர் பைங்கிளிகளின் பரபர லிஸ்ட் இதோ.....”ரஜினியின் முதல் கதாநாயகி (ஆனால் டூயட்டெல்லாம் கிடையாது) ஸ்ரீவித்யா! பின்...சுமித்ரா, சரிதா, ஜெயசித்ரா, ஜெயப்பிரதா, படாபட் ஜெயலட்சுமி, ரதி, லட்சுமி, ரீனா, ஸ்ரீதேவி, சீமா, மாதவி, ராதிகா, ஜோதி, அம்பிகா, ராதா, அனிதாராஜ், சுஹாஷினி, பூர்ணிமா ஜெயராம், சுலக்‌ஷணா, ரேவதி, அமலா, ரூபிணி, குஷ்பூ, கெளதமி, நதியா, ஷோபனா, கனகா, ஷீபா, ஜூஹி சாவ்லா, பானுப்ரியா, விஜயசாந்தி, மீனா, ரோஜா, நக்மா, ரம்பா, செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ராலா, ஜோதிகா, ஸ்ரேயா, ஐஸ்வர்யா ராய், நயன் தாரா, ஈஸ்வரி ராவ், ராதிகா ஆப்தே, சிம்ரன், எமி ஜாக்சன். இன்னும் பலர் இந்த லிஸ்டில் வராமல் போயிருப்பது உண்மையே. இவ்வளவு பேரில் ரஜினிக்கு ஹாட்டான ஜோடியாக பேசப்பட்டவர்களை அந்த காலத்திலிருந்து பார்ப்போமேயானால்... துவக்க காலத்தில் படாபட் ஜெயலட்சுமியும், அதன் பின் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியாவும், அதன் பின் ராதாவும், அதன் பின் குஷ்பு மீனாவும் அதன் பின் நயன் தாராவும் ரஜினியின் ஹாட் ஜோடிகளாக கருதப்பட்டவர்கள். இது ஒரு புறம் இருக்கட்டும்!


தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கே முன்னுரிமை உண்டு. அதிலும் ரஜினி படங்களில் ஹீரோயின் வெறும் கிளாமர் டாலாகவே பயன்படுத்தப்படுவார்கள். ஆனாலும் அதையும் மீறி ரஜினி, சூப்பர் ஸ்டார் மற்றும் மாஸ் ஹீரோவான பிறகும் சில ஹீரோயின்கள் அவரது படங்களில் தடம் பதித்தனர். அவர்களில் மன்னன் படத்து விஜயசாந்தியும், படையப்பா படத்தின்  ரம்யா கிருஷ்ணனும் மறக்க முடியாத வில்லனிக் ஹீரோயின்களாக பார்க்கப்படுகின்றனர். அதேபோல்  ’அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜியின் மகள் வயது பெண்ணாக நடித்த மீனா, அதன் பின் அவருக்கு ஜோடியாக எஜமான், முத்து படங்களில் கைகோர்த்தார். சினிமாவில் செம்ம ரவுண்டு வந்துவிட்டு பின் கல்யாணமாகி செட்டிலாகிவிட்டார் மீனா. ஆனால் ரஜினியோ எமி ஜாக்சன் வரை ஆட்டம் போட்டுவிட்டு இப்போது தனது புதிய படத்தில் வயதான ரஜினி கேரக்டருக்கு மீண்டும் மீனாவை ஜோடியாக்கி இருக்கிறார். இதே படத்தில் பல வருடங்களுக்கு முன் ரஜினியின் ஹீரோயினாக நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார் (ஆனால் மகளாகவா அல்லது இளம் ரஜினிக்கு (?!) ஹீரோயினா என தெரியவில்லை)


ரஜினியின் ஹீரோயின்களாக நடித்த ஸ்ரீவித்யா, சுஜாதா, அம்பிகா ஆகியோர் அவருக்கே அம்மாவாக, அக்காவாக நடித்த ஸ்வீட் கொடுமைகளும் தமிழ் சினிமாவில் உண்டு. 
ரஜினியின் முதல் ஹீரோயினான ஸ்ரீவித்யா, தளபதி படத்தில் அவரது அம்மாவாகவும், உழைப்பாளியில் அக்காவாகவும் நடித்தார். அவர்கள் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்த சுஜாதா, உழைப்பாளியில் அவரது அம்மாவானார். அதேபோல் பல படங்களில் ரஜினிக்கு ஹாட் ஜோடியாக நடித்த அம்பிகா, முத்து படத்தில் வயதான ரஜினியின் ஜோடியாக நடித்தார். இதே படத்தில் இளம் (!?) ரஜினியின் ஜோடியாக மீனா. என்னத்த சொல்ல!? எல்லாம் தலைவரின் ஜாலங்கள்!