சமூக ஊடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலான 'காண்டிராக்டர் நேசமணி’ என்ற பெயரில் சினிமா எடுக்க அந்தப் பெயர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 ‘பிரே ஃபார் நேசமணி’, ‘காண்டிராக்டர் நேசமணி’ ஆகிய வார்த்தைகள் சமூக ஊடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலானது. ’ஃபிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேல் நடித்த ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற கதாபாத்திரத்துக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாகவும், அதற்காக ‘பிரே ஃபார் நேசமணி’ என்ற வார்த்தையைப் போட்டு தமிழர்கள் சமூக ஊடகங்களில் அதகளப்படுத்திவிட்டார்கள்.
சமூக ஊடங்களில் திரும்பும்  திசையெல்லாம் ‘நேசமணி’ என்ற பெயரே நிறைந்திருந்ததால், சமூக ஊடகங்களில் அந்த வார்த்தை ஹிட் அடித்தது. ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தையும் உலக அளவில் இரண்டாவது இடத்தையும் ‘நேசமணி’ என்ற வார்த்தை முந்தியது. மோடி பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற நிகழ்வைக்கூட ‘நேசமணி’ பின்னுக்குத் தள்ளினார். அந்த அளவுக்கு நம்மவர்கள் ‘நேசமணியை’ டிரெண்டிங் செய்தார்கள்.
இந்நிலையில் ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற வார்த்தையைப் படத் தலைப்பாக தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஏஸ் மீடியா என்ற நிறுவனம் இந்தப் பெயரை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடங்கள் மூலம் பெரும் பப்ளிசிட்டி பெற்ற ‘காண்டிராக்டர் நேசமணி’யை என்றபெயரில் படம் தயாரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.