Asianet News TamilAsianet News Tamil

அதிதி மேனன் ஒரு வாரம் மட்டுமே நடித்துவிட்டு ஓடிப்போன ‘நெடுநல் வாடை’ விமர்சனம்...

வாழாவெட்டியாய் வந்திருக்கும் சகோதரி தனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்பாளோ என்கிற ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்து வீட்டை விட்டுத்துரத்த முயல்கிறார் அண்ணன் கொம்பையா. செல்லையாவோ ‘ மகளா இருந்தாலும் அவளும் என் ரத்தம் தானே. பொம்பளைப் பிள்ளைகளை மட்டு தவிட்டுக்கா வாங்கிட்டு வந்தோம்’ என்று மகனுடன் மோதி மகளைத் தற்காக்கிறார்.

nedunalvaadai movie review
Author
Chennai, First Published Mar 13, 2019, 6:03 PM IST

‘ஹரஹரமகாதேவகி’,’இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு’,’90 எம்.எல்’போன்ற மூன்றாம் தர படங்களைத் தொடர்ந்து தந்து, தமிழ் சினிமா ரசிகர்களை தியேட்டர் என்னும் ’இருட்டு அறைக்குள் வைத்து முரட்டுக் குத்து’ குத்தும் இயக்குநர்களுக்கு மத்தியில் வாராது வந்த மாமணிகளுல் ஒருவராய் ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் வந்து சேர்ந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன்.nedunalvaadai movie review

இயக்குநரின் வகுப்புத் தோழர்கள் 50 பேர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள் என்று செய்திகள் வந்தபோதே, ‘அடடே 50 பேரின் கூட்டுமுயற்சி ஒரு நல்ல தரமான விஷயமாக உருவாகவேண்டுமே என்ற தவிப்பு மனதின் ஒரு ஓரத்தில் இருந்தது உண்மை. அந்தப் பொறுப்பை மிக சிறப்பாகவே செய்துமுடித்திருக்கிறார் செல்வக்கண்ணன்.

ஒரு எளிய கிராமத்தில் நடக்கும், அதைவிட எளிமையான கதைதான் ‘நெடுநல்வாடை’. ஏழை விவசாயி செல்லையாவின் மகள் பேச்சியம்மா தனது கணவனால் கைவிடப்பட்டு,  சின்னஞ்சிறுசுகளான தனது மகன் மற்றும் மகளுடன் தந்தையிடம் அடைக்கலம் தேடி வருகிறார். வாழாவெட்டியாய் வந்திருக்கும் சகோதரி தனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்பாளோ என்கிற ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்து வீட்டை விட்டுத்துரத்த முயல்கிறார் அண்ணன் கொம்பையா. செல்லையாவோ ‘ மகளா இருந்தாலும் அவளும் என் ரத்தம் தானே. பொம்பளைப் பிள்ளைகளை மட்டு தவிட்டுக்கா வாங்கிட்டு வந்தோம்’ என்று மகனுடன் மோதி மகளைத் தற்காக்கிறார்.

தாத்தாவின் ஒரே நம்பிக்கை பேரன் இளங்கோதான். அவன் வளர்ந்து பெரிய ஆளாகி தங்கையையும் அம்மாவையும் காப்பாற்றினால் தனது வாழ்வுக்கு அர்த்தம் கிடைத்துவிடும் என நினைக்கிறார். நினைத்ததெல்லாம் நடந்து  மனுஷப் பயலின் வாழ்க்கை அத்தனை சுலபமாய் இருந்துவிடுமா என்ன? வேலைக்குப் போகும் முன்பே தனது இளம்பருவத்துத் தோழி அமுதாவைக் காதலிக்கிறான் இளங்கோ. அந்தக் காதல் இளங்கோ, அமுதா, தாத்தா ஆகியோரை என்னமாய்ப் பந்தாடுகிறது என்று போகிறது கதை.nedunalvaadai movie review

ரத்தமும் சதையுமாய் இப்படி சில கிராமத்து ஜனங்களை தமிழ் சினிமாவில் பார்த்து எத்தனை நாளாச்சு? அறிமுக இயக்குநர் என்ற எண்ணம் ஒரு இடத்தில் கூட தோணிவிட முடியாத அளவுக்கு அபாரமாகக் கதையைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன். 2019ன் ஆண்டின் முதல் முத்தான சத்தான  வரவு.

இவருக்கு அடுத்து படத்தைத் தாங்கிப் பிடிப்பவர்கள் செல்லையாத் தேவராகவே வாழ்ந்திருக்கும் ‘பூ’ராமு, அமுதாவாகவே வாழ்ந்திருக்கும் அஞ்சலி நாயர் ஆகியோர்.சுருக்கமாகச் சொல்வதானால் இப்படத்திற்காக  சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுத்து கவுரவிக்கப்படவேண்டியவர் ராமு. அஞ்சலி நாயரோ குறும்புப்பெண்ணாக  காதல் அழிச்சாட்டியங்கள் பண்ணுகிறபோதும், பிற்பகுதியில்  குமுறி அழுகிறபோதும் ’தமிழ் சினிமாவுக்கு நான் ஒரு முக்கியமான வரவு பாஸ்’என்கிறார்.

 [இதே கேரக்டரில் ஒரு வாரம் நடித்துவிட்டு ஓடிப்போன அதிதி மேனன் வயிற்றில் அடித்துக்கொள்வது நிச்சயம்]

ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி.  அச்சு அசல் கிராமத்தைக் கண்முன்கொண்டுவந்து நிறுத்துகிறார். பாடல்களில் ஓரளவு ஸ்கோர் செய்து பின்னணி இசையில் சோடை போகும் இன்றைய எக்கச்சக்கமான இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் ஜோஸ் ஃப்ராங்க்ளின் ஒரு மியூசிக்கல் சர்ப்ரைஸ். வைரமுத்துவின் இளமைகுறையாத பாடல் வரிகளில் ’ஏதோ ஆகிப் போச்சு’, ‘கருவாத் தேவா’ ஆகிய பாடல்களில் ‘அட’ போட வைக்கிறார் ஃப்ராங்க்ளின்.nedunalvaadai movie review

ஒரு நல்ல சினிமாவில் எடிட்டர் என்பவர் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கவேண்டும் என்பார்கள். தனது தரமான பங்களிப்பை அவ்வண்ணமே வழங்கியிருக்கிறார் மு.காசி விஸ்வநாதன்.

படத்தின் முன்பாதியில் முக்கியப் பங்கு வகிக்கும் அண்ணன் கொம்பையா இரண்டாவது பாதியில் காணாமல் போனதற்கு வசனங்கள் வாயிலாகவாவது ஏதாவது சமாளிக்கப்பார்த்திருக்கலாம். அதே போல் க்ளைமேக்ஸ் திருவிழா பாடல்காட்சி படத்துக்கு திருஷ்டி.nedunalvaadai movie review

ஆனாலும் ஒரு உணர்ச்சிகரமான கிராமத்து வாழ்வை, நேர்த்தியான நெல்லை பாஷையோடு தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்து சேர்த்தவகையில், முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் செல்வக்கண்ணன். வெல்கம் அண்ணாச்சி...

Follow Us:
Download App:
  • android
  • ios