Ameer: சிக்கிய ஜாபர் சாதிக்; விசாரணை வளையத்துக்குள் இயக்குனர் அமீர்- மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதாகி உள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். பின்னர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கடந்த மார்ச் 9-ந் தேதி ஜாபர் சாதிக்கை மடக்கிப் பிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டு அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் அந்த பணத்தை வைத்து சினிமா, ஓட்டல் பிசினஸ் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் நெருங்கிப் பழகியவர்களிடமும், அவருடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Aranmanai 4 : அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி
அந்த வகையில், தற்போது இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பி உள்ளது NCB. வருகிற ஏப்ரல் 2ந் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர ஜாபர் சாதிக் உடன் இணைந்து காஃபி ஷாப் தொடங்கிய அப்துல் பாசித் புகாரி,சையது இப்ராகிம் உள்ளிட்டவர்களுக்கும் NCB சம்மன் அனுப்பி உள்ளது.
அமீர் நடித்து வந்த இறைவன் மிகப்பெரியவன் படத்தை ஜாபர் சாதிக் தான் தயாரித்து வந்தார். இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்குமா என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தன் நிலைப்பாட்டை கூறிய அமீர், தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று விளக்கம் அளித்ததோடு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Vijay Flop Movie : படம் கன்பார்ம் பிளாப் ஆகும்னு தெரிஞ்சும்... தளபதி விஜய் நடிச்ச படம் எது தெரியுமா?