பொதுவாக, பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களின் உடல் நிலை சுகம் இல்லை என கேள்வி பட்டால், தன்னுடைய மேனஜர் மூலம்... அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, அல்லது பண உதவி செய்வார்கள். ஆனால் இளம் ஹீரோ ஒருவர் அந்த ரசிகரின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தது மட்டும் இன்றி அவருடைய மருத்துவ செலவையும் ஏற்பதாக கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் பல கஷ்டங்களை தாண்டி, இன்று வளர்ந்து வரும் நடிகர் என்கிற பட்டியலில் இடம் பிடித்துள்ளவர், கலையரசன். இவர் பல படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், இவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திய திரைப்படம் என்றால் அது,  இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் தான்.

இதை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி, சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், நயன்தாராவின்  ஐரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். மேலும் தனி ஹீரோவாக இவர் நடித்த சில படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

திரையுலகில் நிலையான இடத்தை பிடித்து விட்ட இவருக்கு சில ரசிகர் மன்றங்களும் இயக்கி வருகிறது. அந்த வகையில் கலையரசனின் பாண்டிச்சேரி ரசிகர் மன்ற நிர்வாகியான தினேஷ் என்பவர், திடீர் என நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். 

இதையடுத்து கலையரசனுக்கு இது பற்றி, மற்ற நிர்வாகிகள் மூலம் தெரிய வர,  தினேஷின் முகவரியை கேட்டு, அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதுடன், மேற்கொண்டு சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை தான் செய்வதாகவும் கூறியுள்ளார். சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரும்  சூழல் உருவானால் அதற்க்கும் தான் உதவுவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயல் அனைவரையுமே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.