நானும் ரெளடி தான் படம் ஓடிடி.,யில் தற்போது ரிலீசாகி உள்ளது. ஆனால் இதை கொண்டாட முடியாத அளவிற்கு ஓடிடி நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை : விஜய் சேதுபதி- நயன்தாரா நடித்த பிளாக்பஸ்டர் படமான நானும் ரெளடி தான் படம் ரிலீசாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஓடிடி.,யில் ரிலீசாகி உள்ளது. ஆனால் இந்திய ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஓடிடி தள ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் நானும் ரெளடி தான். ராதிகா சரத்குமார், மன்சூர் அலிகான், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்த காமெடி, ஆக்ஷன், ரொமான்டிக் படமான இந்த படத்தின் கதை, பாடல்கள், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் நடிப்பு ஆகிய அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் இந்த படம் மிகப் பெரிய ஹிட் படமானது. அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் தற்போது வரை காதலர்களின் ஃபேவரைட் பாடல்களாக இருந்து வருகிறது. 

புதுச்சேரியில் வாழும் ஒரு இளைஞனுக்கு, செவி திறன் இழந்த பெண் மீது காதல் ஏற்படுகிறது. தன்னுடைய பெற்றோர்களை கொன்ற ரெளடி கும்பலை அழிப்பதற்காக தன்னிடம் உதவி கேட்டு வரும் அந்த பெண்ணிற்கு ஆறுதலாக இருக்கிறார் அந்த இளைஞர். அந்த பெண்ணிற்காக அந்த இளைஞன் எடுக்கும் முயற்சிகளை காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் நானும் ரெளடி தான் படம். விக்னேஷ் சிவன்- நயன்தாரா முதன் முதலில் சேர்ந்து பணியாற்றியது, அவர்களின் காதல் உருவானது இந்த படத்தில் தான்.

படம் ரிலீசாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிம்ளி செளத் ஓடிடி தளத்தில் இந்த படம் பிப்ரவரி 10ம் தேதி ரிலீசாகி உள்ளது. இதை தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்த சிம்ளி செளத் நிறுவனம், இந்த படத்தை இந்திய ரசிகர்கள் மட்டும் பார்க்க முடியாது. இந்தியா தவிர உலகம் முழுவதிலும் சிம்ளி செளத் தளத்தை இந்த பிளாக்பஸ்டர் படத்தை பார்த்து மகிழலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததை பார்த்து இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். காதலர் தினம் கொண்டாட உள்ள சமயத்தில் நானும் ரெளடி தான் படம் ஓடிடி.,யில் வர உள்ளது என்ற ச்ந்தோஷம் ரசிகர்களிடம் காணாமல் போய் உள்ளது.

நானும் ரெளடி தான் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை தன்னுடை அனுமதி இல்லாமல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தன்னுடைய டாக்குமென்ட்ரியில் பயன்படுத்தியதாக காப்பிரைட் விவகாரத்தை எழுப்பி நடிகர் தனுஷ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனுஷ் - நயன்தாரா இடையேயான இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் இன்னும் முடிவடையாததால் சிம்ளி செளத் நிறுவனமும் இந்திய ரசிகர்கள் மட்டும் இந்த படத்தை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதித்து, படத்தை ரிலீஸ் செய்துள்ளது.