என் பாடல் வரிக்கா கத்திரி போடுறீங்க! சென்சார் போர்டுக்கே தண்ணி காட்டி.. நா.முத்துக்குமார் செய்த தரமான சம்பவம்
பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளான இன்று, அவர் சென்சார் போர்ட் அதிகாரிகளுக்கே தண்ணி காட்டிய சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாடல் வரிகள் மூலம் மக்களின் உணர்வுகளோடு கலந்து, மனதில் நீங்கா இடம் பிடித்த கலைஞன் தான் நா.முத்துக்குமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மறைந்தாலும் இவரின் பாடல் வரிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் இவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இன்றளவும் யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடலசிரியராக திகழ்ந்து வந்துள்ளார் நா.முத்துக்குமார்.
கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளான இன்று அவரது பாடல்களை பகிர்ந்து, அவர் எழுதிய எண்ணற்ற கவிதைகளை பதிவிட்டும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் தன்னுடைய பாடல் வரிகளுக்கு கத்திரி போட்டு தூக்கிய சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி, அதே வரிகளை வேறொரு படத்தில் பயன்படுத்திய தரமான சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழில் மாதவன், ஜோதிகா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் டும் டும் டும். அந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து இருந்தார். அப்படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய ‘அத்தான் வருவாக’ என்கிற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. அந்த பாடலுக்காக, ‘புத்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே... போதி மர உச்சியிலே ஊஞ்சல் ஆடுவானே’ என்கிற வரிகளை முதலில் எழுதி இருந்தாராம் நா.முத்துக்குமார்.
இதையும் படியுங்கள்... லால் சலாம் ரஜினியை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்திய இளைஞர்; வைரல் வீடியோ!!
இதைக்கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள் புத்தரைப் பற்றி எப்படி நீங்க இப்படி எழுதலாம்னு சொல்லி அதற்கு கத்திரி போட்டார்களாம். உடனே புத்தனை சித்தன் ஆக்கி, போதிமரத்துக்கு பதிலாக ஆலமரம் என மாற்றி, ‘சித்தன் கூட காதலிச்சா புத்தி மாறுவானே... ஆலமர உச்சியிலே ஊஞ்சல் ஆடுவானே’ என திருத்தி எழுதிக்கொடுத்தாராம் முத்துக்குமார்.
தான் ரசிச்சு எழுதுன பாடல் வரிகளில் சென்சார் போர்டு கைவைத்து விட்டார்களே என ஆதங்கப்பட்ட நா.முத்துக்குமார், இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தில் இடம்பெறும் ‘அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு’ என்கிற பாடலில் புத்தன், போதிமரம் என அதே வரிகளை வைத்து சென்சார் போர்டு அதிகாரிகளுக்கே தண்ணி காட்டி இருக்கிறார்.
அந்த பாடலில், ‘காதல் வந்து நுழைந்தால் போதி மர கிளையில், ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்’ என்கிற வரிகளை எழுதி இருக்கிறார் நா.முத்துக்குமார். இது சென்சார் போர்டு அதிகாரிகளால் கவனிக்கப்படவில்லை. இதனால் தான் ஆசைப்பட்ட பாடல் வரியை ஒருவழியாக படத்தில் வைத்துவிட்டோம் என உற்சாகம் அடைந்தாராம் நா.முத்துக்குமார்.
இதையும் படியுங்கள்... குறும்பா என் உலகே நீதான்டா! கியூட் போட்டோஸுடன் செல்ல மகன் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்