யதார்த்த வாழ்வியலை அப்படியே திரைமொழிக்குள் கடத்தும் லாவகம் மலையாள சினிமாவிடம் அதிகம் உண்டு. குறிப்பாக நடப்பு அரசியலின் அத்தனை குணாதிசயங்களையும் பிசிறே இல்லாமல் பின்னிப் பேர்த்து படமெடுப்பதில் ஏட்டன் டைரக்டர்கள் கில்லாடிகள். ஆனால்! நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதான விவகாரத்துக்கு பிறகு மலையாள சினிமா உலகுக்குள் நடக்கும் அரசியலெல்லாம் ஒரிஜினல் அரசியல்வாதிகளுக்கே தண்ணி காட்டும் ட்ரிக்காக இருக்கிறது. 

அதுவும் அந்த விவகாரத்தில் கைதாகி சிறை அனுபவித்து வெளியே வந்திருக்கும் திலீப், மீண்டும் நடிகர் சங்கத்தினுள் உறுப்பினராக்கப்பட்டதற்கு பின் நடக்கும் நிகழ்வுகள் அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. மலையாள சினி உலகின் நடிகைகள் மற்றும் டெக்னீஸியன்கள் இணைந்து உருவாக்கிய WCC (Women in Cinema Collective) அமைப்பு இப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் குடைச்சலால் மலையாள சினிமாவே மண்டை காய்ந்து கிடக்கிறது. குறிப்பாக, கடந்த 14ம் தேதி எர்ணாகுளத்தில் நடந்த பிரஸ்மீட்டில் ரேவதி, பத்மப்பிரியா, ரீமா போன்றோர் “என்ன நடக்குது இங்கே? பாதிக்கப்பட்ட நடிகை வெளியே நிற்கிறார். ஆனால் குற்றவாளியோ நடிகர் சங்கத்தில் உறுப்பினராகியுள்ளார் மீண்டும். இது என்ன நியாயம்? அவர் இனி சங்கத்தில் தொடரவே கூடாது. திலீப் அந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறாரா? இல்லையா! என்று கடிதம் எழுதினாலும் பதில் இல்லை.

 

தலைவர் பொறுப்பில் இருப்பவர் குற்றவாளியை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது.” என்று கொதித்தனர். இது ‘அம்மா’ (Assoiciation of Malayalam Movie Artists) எனும் மலையாள நடிகர் சங்கத்தை பெரிதும் புண்படுத்திவிட்டது. அதன் சார்பாக பேசிய செயலாளர் சித்திக், “ஒரு குடும்பம் மாதிரிதான் எல்லாமே இருந்தது. ஆனால் இப்போது சிலர் தேவையில்லாமல் ஏதேதோ செய்கிறார்கள், பேசுகிறார்கள். கடைசியாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளலாமா? எனும் தீர்மானம் வந்தபோது யாருமே அதை எதிர்க்கவில்லை. அதனால் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஒருவிஷயம், இதுவரையில் திலீப்பை குற்றவாளி என்று கோர்ட் ஒன்றும் சொல்லிவிடவில்லை. அப்படி தீர்ப்பு வந்தால் நடிவடிக்கை எடுப்போம். 

சூழல் இப்படியிருக்கும் நிலையில், இவர்கள் ஏன் இவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார்கள்? தன்னால் வீண் பிரச்னை வேண்டாமென்று திலீப் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் அதன்கு பிறகும் கூட பேட்டி கொடுத்து அசிங்கம் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் மோகன்லாலை பலிகடாவாக்குகின்றார்கள், மம்மூட்டிக்கு எதிராக பேசுகிறார்கள். முகநூல் பக்கங்களில் தேவையில்லாமல் மோசமான வார்த்தைகளால் தாக்குகிறார்கள். என்ன நடக்குது இங்கே?” என்று பொங்கியவரிடம் தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்பட்டபோது... 

“இவர்களின் இலக்கே புரியவில்லை, பின்னணியில் யார் உள்ளார்கள் எனவும் தெரியவில்லை. மம்மூட்டி, மோகன்லால் இருவரையும் டார்கெட் செய்து அடிக்கிறார்கள். அந்த இரு தூண்களும் இல்லாமல் மலையாள சினிமா இயங்கிடுமா? அவர்கள் இருவரையும் நடிக்க விடாமல் தடுத்துவிட்டால் இவர்களுக்கு சந்தோஷமா?” என்று ஆதங்கப்பட்டுள்ளார். இதற்கு பெண்கள் சங்கத்தின் சைடிலிருந்து இதுவரையில் ரிப்ளை இல்லை. ஆனால் மலையாள சினிமா உலகினுள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரளயத்தால், ஆளுமையான கலைஞர்கள் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவதென்னவோ மலையாள சினிமா மட்டுமல்ல உலக சினிமா ரசிகர்கள்தான்.