மீராவின் உடல் நல்லடக்கம்... கண்ணீருடன் மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர், இயக்குனர், எடிட்டர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் ஆனது. பாத்திமா என்பவரை கரம்பிடித்த விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படும் மீரா, நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் விஜய் ஆண்டனி. இதையடுத்து அங்கு மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் மீராவின் உடலைக் கைப்பற்றிய தேனாம்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் மீராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டில் அஞ்சலிக்காக மீராவின் உடல் வைக்கப்பட்டது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்து விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதோடு, விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்... மகளை இழந்து வாடும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு... அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்! போட்டோஸ்
நேற்று மாலையே மீராவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்க தாமதம் ஆனதால், இன்று காலை மீராவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. நுங்கப்பாக்கத்தில் உள்ள சர்ச்சியில் வைத்து இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டதை அடுத்து மீராவின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
மகளின் உடலை நல்லடக்கம் செய்யும்போது மீடியாக்கள் அதை படம்பிடிக்க வேண்டாம் என விஜய் ஆண்டனி முடிவெடுத்ததால், கல்லறை தோட்டத்திற்குள் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து மகளின் உடலை கண்ணீருடன் நல்லடக்கம் செய்தார் விஜய் ஆண்டனி. அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
இதையும் படியுங்கள்... Meera Letter: விஜய் ஆண்டனி மகள் தற்கொலை பற்றி வெளியான புதிய தகவல்! பாட புத்தகத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்!