மாரி செல்வராஜின் 'பைசன் காளாமாடன்' திரைப்பட வெளியீட்டை திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடி உள்ளனர்.

Bison Movie FDFS Celebration : இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடித்த 'பைசன்' திரைப்படம் இன்று வெளியானது. கபடி வீரரின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இப்படத்தின் வெளியீட்டை, இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலியில் அவரது ரசிகர்கள் மற்றும் படத்தில் நடித்த கலைஞர்கள் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுடன் வரவேற்றனர்.

திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் 'பைசன்' திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் துணை நடிகர்களாக நடித்தவர்கள், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரையரங்கிற்கு வருகை தந்து உற்சாகத்துடன் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.

பைசன் பட கொண்டாட்டம்

இயக்குனர் மாரி செல்வராஜின் ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போதும், அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அதேபோல, இன்று வெளியான 'பைசன்' திரைப்படத்தின் வெளியீட்டையும் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். திரையரங்க வளாகம் முழுவதும் பெரிய அளவிலான ப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.

வான வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, ரசிகர்கள் உற்சாக நடனத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாரி செல்வராஜின் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் மற்றும் அவரது திரைப் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தக் கொண்டாட்டங்கள் திருநெல்வேலியை விழாக்கோலம் பூணச் செய்தன. 'பைசன்' திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த வெற்றியாக இது அமையும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.