மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் உட்பட படக்குழுவினரை புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் பைசன். இப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் ரிலீசுக்கு முன்பாகவே படத்தைப் பார்த்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் உட்பட படக்குழுவினரை புகழ்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
படம் தொடர்பாக உதயநிதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்.
வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.
படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பைசன் - காளமாடன் வெல்லட்டும்” என்று குறிப்பிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
