Many more will complain to the financer anbuchelian - Sasikumar ...

பைனான்சியர் அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார் அளிப்பார்கள் என்று காவலர்களின் விசாரணைக்கு பிறகு இயக்குநர் சசிகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் மேலாளரும், இணை தயாரிப்பாளரும், நெருங்கிய உறவினருமான அசோக்குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், "மதுரை பைனான்சியர் அன்பு செழியனின் கந்துவட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் சசிகுமார் அன்புசெழியன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலாளர்கள், அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்துள்ளனர். ஆனால், அன்பு செழியன் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சசிகுமார் நேற்று வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரிடம் காவல் துணை ஆணையர் அரவிந்த், உதவி ஆணையர் சம்பத் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரனை சுமார் இரண்டு மணிநேரம் நடந்தது. சசிகுமாருடன் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் ஆகியோரும் இந்த விசாரணையில் உடன் இருந்தனர்.

அந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகுமார், "என் வளர்ச்சிக்கு காரணமே அசோக்குமார் தான். அவன் மறைவில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.

காவல் விசாரணையில் எனக்கு தெரிந்த தகவல்களை சொன்னேன். அன்புசெழியனுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறவர்கள் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். பைனான்சியர் அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார் அளிப்பார்கள்" என்று தெரிவித்தார்.