நடிகர் விவேக் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக சுயநினைவின்றி, சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது இதயத்தில் 100 சதவீத அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அதற்காக ஆஞ்சியோ அறுவைசிகிச்சையும் உடனடியாக செய்யப்பட்டது. 

24 மணி நேரம் கழித்தே எதையும் கூற முடியும், என மருத்துவர்கள் கெடு விதித்த நிலையில்...  17ஆம் தேதி காலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் உயிரிழந்த  தகவல் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிப்பைத் தாண்டி பல்வேறு சமூக அக்கறை கொண்ட பணிகள் மற்றும் இயற்கை ஆர்வலராகவும் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் விவேக். இவரின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி மக்கள் அனைவருக்குமே பேரிழப்பாக கருதப்படுகிறது.  

இந்நிலையில் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே கொரோனாவிற்கு எதிரான, தடுப்பூசி போட்டுக் கொண்டார். எனவே இதன் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம், என்று சில வதந்திகள் பரவி வந்த நிலையில் விவேக்கின் மாரடைப்பிற்கும், தடுப்பூசிக்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தெளிவுபடுத்தினர்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி தொடர்பாக சில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். எனவே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர்அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூரலிகான் மீது வடபழனி காவல் துறையினரிடம் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி, கடந்த 19 ஆம் தேதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று இவருடைய ஜாமீன் மனு, விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.