மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்த பட அப்டேட் வெளியாகி இருக்கிறது.
Director Chidambaram Next Movie : மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் அடுத்த படம்
அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் "பாலன்" என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கின்றனர். "பாலன்" திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளம் மட்டுமின்றி 2025 ஆண்டிலேயே கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கன்னடத்தில் யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படம், தமிழில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் இந்தி திரையுலகில் பிரியதர்ஷனின் திரில்லர் திரைப்படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இதன்மூலம் பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் தயாரிப்பு நிறுவனமாக கே.வி.என் மாறி இருக்கிறது. அந்நிறுவனம் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இயகுநர் சிதம்பரம் இயக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி இருந்தது. கொடைக்கானலின் குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கி இருந்தார் சிதம்பரம். அப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய மலையாள படம் என்கிற சாதனையையும் மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
