‘அசுரன்’ படத்தில் தனுசுடன் நடிப்பது குறித்து என்னை விட என் தோழிகள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். நான் நடித்து வரும் படங்களிலேயே அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக இப்படம் அமைந்துள்ளது’ என்கிறார் மலையாளத்திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர்.

‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் தற்போது மலையாளத்தில் படு பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது முதல் தமிழ்ப்படம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் அவர் நடித்து வரும் ‘அசுரன்’. எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலே அசுரனாகப் படமாகிவருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து மலையாள இணைய இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள மஞ்சு வாரியர்,’’ அசுரன்’ படமும், அப்பட ஹீரோவும் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள். இக்கூட்டணி தேசிய விருதுகள் பெற்ற கூட்டணி என்பதால் என் தோழிகள் நான் நடித்து வரும் படங்களிலேயே இப்படம் குறித்துதான் அதிக ஆர்வமாக விசாரிக்கிறார்கள்.

மலையாள மொழி பரிச்சயமான அளவுக்கு எனக்கு தமிழும் எழுதப் படிக்க பேசத் தெரியும் என்பதால் இப்படத்துக்கு நான் தான் டப்பிங் பேசுவேன். டைரக்டர் வெற்றிமாறன் வேண்டுகோள் வைத்திருப்பதால் இப்படத்தின் கதை குறித்தும் என் கேரக்டர் குறித்தும் இப்போதைக்கு எதுவும் பேசமுடியாது’என்கிறார் மஞ்சு வாரியர்.