'மனிதம் காத்து மகிழ்வோம்' ரஜினி ரசிகர்கள் மாநாடு திடீர் ரத்து..! வெளியான பரபரப்பு அறிக்கை..!
ரஜினி ரசிகர்கள் சார்பில், 'மனிதம் காத்து மகிழ்வோம்' எங்கிற மாநாடு வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து பின் வாங்கினார். மேலும் இது குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், கூறிய தகவல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அரசியலுக்கு வரவில்லை என்றாலும், ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்ற்னர். அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் மாநாடு வரும் 26 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதில் ஏழை எளியவர்கள், மாற்று திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ரஜினி ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற தலைப்பில்,வரும் 26 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த மாநாட்டில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, ஆகிய அரசியல் தலைவர்களும்... இயக்குனர் எஸ் பி முத்துராமன், பி வாசு, கார்த்திக் சுப்புராஜ், கே எஸ் ரவிக்குமார், ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ராகவா லாரன்ஸ், உள்ளிட்ட பலர் பங்கேற்ற இருந்தனர்.
ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த மாநாடு நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில்... தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பு தலைவரின் சொந்தங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள், சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ திடலில் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருந்த சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் தொண்டாற்றும் மனிதம்,காத்து மகிழ்வோம் விழா தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. சிரமத்திற்கு மன்னிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அவர்களிடம் நேரில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.