சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ திரைப்படத்தால் தனது தென்னிந்திய திரை வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மனிஷா கொய்ராலா வேதனையுடன் பேசியுள்ளார்.

Manisha Koirala about Baba Movie

மனிஷா கொய்ராலா 1970 ஆம் ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் பிறந்தார். நேபாளத்தின் அரசியல் ரீதியாக புகழ்பெற்ற கொய்ராலாக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா பிஸ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலா நேபாளத்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர். மனிஷா கொய்ராலாவின் தந்தை பிரகாஷ் கொய்ராலா முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர். அவரது சகோதரர் சித்தார்த் கொய்ராலா நடிகராக இருந்து வருகிறார். மனிஷா கொய்ராலாவும் திரைத்துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1989 ல் நேபாள திரைப்படமான ‘ஃபெரி பெட்டோல’ என்கிற படத்தின் மூலமாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு ‘சௌதகர்’ என்கிற ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

மனிஷா கொய்ராலா நடித்த தமிழ்ப் படங்கள்

தமிழில் 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. முதல் படமே ஹிட் அடித்த நிலையில் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘இந்தியன்’, ‘உயிரே’, ‘முதல்வன்’, ‘ஆளவந்தான்’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன், அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், நேபாளம், இந்தி என பல மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு இவருக்கு நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமண வாழ்க்கை இரண்டு வருடங்களிலேயே முடிவடைந்தது. 2012 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார்.

புற்றுநோயை எதிர்த்து போராடிய மனிஷா கொய்ராலா

2012 ஆம் ஆண்டு மனிஷா கொய்ராலாவுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வாழ்க்கையில் பெரிய சவாலாக அமைந்தது. அமெரிக்காவுக்குச் சென்ற அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றார். தற்போது புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் புற்றுநோய் பாதித்த பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். புற்றுநோய் பாதித்த சமயத்தில் தான் சந்தித்த சவால்களை ஒரு வாழ்க்கை புத்தகமாகவும் எழுதி வழிகாட்டியுள்ளார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தனது தென்னிந்திய திரைப்படப் பயணம் முடிவுக்கு வந்தது குறித்து கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டு ‘பாபா’ படத்தில் அவர் நடித்தது தான் தென்னிந்திய திரைப்பயணம் முடிவுக்கு வர காரணமாக இருந்ததாக அவர் கூறினார்.

பாபா படத்தின் தோல்வி ஒரு பேரழிவு

பாபா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இது குறித்து பேட்டியளித்துள்ள மனிஷா கொய்ராலா, “‘பாபா’ திரைப்படம் தான் தன்னுடைய கடைசி தமிழ் படமாக இருந்தது. அந்த காலத்தில் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அது வெறும் தோல்வி மட்டுமல்ல. மிகப்பெரும் பேரழிவாக அமைந்தது. அந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்த நிலையில், என்னுடைய தென்னிந்திய திரைப்பயணம் முடிந்துவிடும் என்று நான் நினைத்தேன். அதுபோலவே நடந்து விட்டது. பாபா படத்தின் தோல்விக்கு பின்னர் தென்னிந்திய பட வாய்ப்புகள் பெருமளவில் குறைய தொடங்கி விட்டது. பாபா படத்திற்கு முன்னர் தான் பல நல்ல தென்னிந்திய படங்களை நடித்து வந்ததாகவும், பாபா பட தோல்விக்கு பின்னால் தென்னிந்திய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் முற்றிலும் நின்று விட்டன” என்று மனிஷா கொய்ராலா வேதனையுடன் பேசினார்.

ரஜினி சார் எப்போதும் தோற்க மாட்டார்

மனிஷா கொய்ராலாவின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் மனிஷா கொய்ராலா ரஜினி மீது எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை. ரஜினி குறித்து பேசிய அவர், “20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாபா வெளியான போது படம் ஹிட்டானது. இது இதுவரை கேள்விப்படாத ஒன்று. ரஜினி சார் எப்போதும் தோல்வியடைய மாட்டார். அவர் தன்னுடைய வேலையை செய்யும் எளிய மனிதர்” என்று பாராட்டினார். பாபா திரைப்படத்தின் கதை, திரைக்கதையை ரஜினியே எழுதி தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் வணிக ரீதியான தோல்வி ஒரு நடிகரின் வாழ்க்கையே எந்த அளவிற்கு மாற்றி விடும் என்பதற்கு மனிஷா கொய்ராலா சிறந்த உதாரணமாக இருக்கிறார்.