கடந்த மாதம் 19 ஆம் தேதி, 'இந்தியன் 2 ' இரவு நேர படப்பிடிப்பின் போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கிருஷ்ணன், சந்திரன், மற்றும் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் படைத்தனர். இதுதொடர்பாக நசரத் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணை  மத்திய குற்றப்புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

இதையடுத்து மார்ச் 3ம் தேதி நடிகர் கமல் ஹாசன் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. அன்று சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அலுவலகத்தில் ஆஜரான கமலிடம் இரண்டறை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நம்மவரிடமே விசாரணையே என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும், கமல் ஹாசனின் ரசிகர்களும் கொந்தளித்தனர். கமலிடம் விசாரணை நடத்தியதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன அறிக்கை கூட வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீட்டார். இந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தும்,விபத்து எப்படி நடந்தது என போலீசார் தன்னை நடித்து காட்ட கூறுவதாக தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் தன்னை துன்புறுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கும் படியும், தனது வழக்கை அவசர வழக்காக ஏற்கவும் கோரிக்கை விடுத்தார். 

கமல் ஹாசனின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அவரது வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் விசாரணை நடத்த உள்ளதாக அறிவிந்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்த போது, விபத்தை நேரில் பார்த்தவர் என்ற முறையில் தான் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

அதனை கேட்ட நீதிபதிகள், காவல்துறையின் விசாரணைக்காக விபத்து நடந்த இடத்திற்கு நாளை கமல் ஹாசன் செல்ல வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகலாம் என்று தீர்ப்பு வழங்கியது.