நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி’ (Rocketry) திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாக உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்பட,ம் ராக்கெட்ரி. இப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் (Madhavan) நடித்திருப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் (Nambi Narayanan). பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன்.

இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் (simran) நடித்துள்ளார். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் தற்போது 3வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் ஜெகன், இப்படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா (suriya), ஷாருக்கான் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ராக்கெட்ரி (Rocketry) படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு தற்போது ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி இப்படம் வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.