தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கபோகிறார் என்ற பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் நிலவி வந்தது. முக்கியமாக உள்ளாட்சி தேர்தலில் கமலுக்கு ஆதரவு தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நடது அன்புத் தலைவர்  ரஜினிகாந்த் அவர்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால், யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.