கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள MGM தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆரம்பத்தில் தனக்கு சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே உள்ளதாவும், யாரும் கவலை பட வேண்டாம் நலமுடன் உள்ளதாக, தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

பின்னர் இவருடைய உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் மீண்டும் உடல் நலம் தேறி வர வேண்டும் என, லட்சக்கணக்கான ரசிகர்கள் கையில் மெழுகு வத்தி ஏந்தி பிராத்தனை செய்தனர். இதன் பலனாக எஸ்.பி.பியும் நன்கு உடல் நிலை தேறி வந்தார்.

எஸ்.பி.பி குறித்து செப்டம்பர் 8 ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தது. மேலும் விரைவில் அவர் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இவருடைய உடல் நிலை மோசமடைந்ததாக கூறப்பட்டது. மேலும் இன்று பிற்பகல் 1 .04 நான்கு மணிக்கு எஸ்.பி.பி காலமானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன், சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி உடல் நலம் பெற வேண்டும் என ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் பிராத்தனை செய்து வந்தனர். குறிப்பாக, நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதாக வெளியான தகவலை தொடர்ந்து பல ரசிகர்கள் நம்பிக்கையுடன் பிராத்தனை செய்து வந்தனர்.

ஆனால் ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதத்தில்... எஸ்.பி.பி இறந்து விட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.