Lata Mangeshkar net worth : மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலகம் முழுவதும் இரசிகர்களைக் கொண்ட லதா, மத்திய பிரதேசத்தில் இந்தூர் அருகில் உள்ள சிக் மொகல்லா என்ற இடத்தில் 1929-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் - சுதாமதி தம்பதியினரின் செல்ல மகள் லதா. லதாவின் தந்தை தீனாநாத் நாடக நடிகரும், பாடகரும் ஆவார். சொந்தமாக நாடகக் குழுவும் வைத்திருந்தார்.
லதாவுக்கு 12 வயது நடந்த போது, தந்தை இறந்து போனார். சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் லதாவிற்கு ஏற்பட்டது. இதையடுத்து தனது கடின உழைப்பால் முன்னேறி சினிமாவில் முன்னணி பாடகியாக உயர்ந்து, இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கினார். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட லதா மங்கேஷ்கருக்கு, பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.111 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. லதா மங்கேஷ்கருக்கு மும்பையில் ஒரு ஆடம்பர மாளிகை உள்ளது. இது 10 குடும்பங்கள் தாராளமாக தங்கும் அளவுக்கு பெரியதாம். மேலும் இவர் முதன்முதலில் வாங்கியது செவ்ரலெட் கார் தான். பின்னர் மெர்சிடிஸ் பென்ஸ், க்ரைஸ்லெர் போன்ற ஆடம்பர கார்களை இவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.