கோவை சரளாவுடன் மோதும் ஜி.பி.முத்து: சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சன்னி லியோன், ஜிபி முத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கோஸ்ட் படமும், பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா படம் போன்று உருவாக்கப்பட்டுள்ள கோவை சரளாவின் செம்பி படமும் ஒரே நாளில் திரைக்கு வர உள்ளன.
காமெடியில் ஆச்சி மனோரமா வரிசையில் ஜொலித்தவர் காமெடி நடிகை கோவை சரளா. கவுண்டமனி, செந்தில் ஆகியோருடன் இணைந்து கோவை சரளா நடித்துள்ள காட்சிகளை பார்க்கும் போது சிரித்து சிரித்து வயிறு தான் வலிக்கும். அதோடு என்னங்க இங்க சண்ட, என்னங்க இங்க சண்ட என்று கோவை சரளா பேசும் வசனங்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். இவ்வளவு ஏன், விவேக்குடன் நடித்துள்ள காட்சிகளில் அதுவும் சிநேகிதனே, பிச்சைக்காரி காட்சி ரசிக்கும்படியாக இருக்கும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 250க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இது தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். ஒரு படங்களில் பின்னணி பாடலும் பாடியிருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் வந்த சதிலீலாவதி படத்தில் இடம்பெற்ற மாருகோ மாருகோ பாடல் இவர் பாடியது தான். இப்படி காமெடி ஜாம்பவனாக திகழ்ந்த கோவை சரளா தற்போது செம்பி என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார், ஞானசம்பந்தம், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
மைனா படத்தை எடுத்த அதே பாணியில் தான் இயக்குநர் பிரபு சாலமன் செம்பி படத்தையும் வித்தியாசமான கதை கருவுடன் எடுத்துள்ளார். எனினும், இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று திரைக்கு வந்த பிறகு தெரிய வரும். வரும் 30 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செம்பி ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் சன்னி லியோன், ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கோஸ்ட் படமும் வெளியாக இருக்கிறது.
அண்மை காலமாக சமூக வலைதளமாக இருந்தாலும் சரி, பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படு பிஸியாக இருப்பவர் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து. ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சன்னி லியோன் உடன் இணைந்து நடனமும் ஆடி அசத்தியிருந்தார். தற்போது எங்கு பார்த்தாலும் ஜிபி முத்து தான் டிரெண்டாகி வருகிறார். சமீபத்தில் கூட பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்கு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் பாதியிலேயே வெளியேறினார். இதுவரையில் யூடியூப்பில் மட்டுமே பார்த்து வந்த ஜிபி முத்துவை திரையில் காண்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.