’கோமாளி’படத்தில் தனது மந்தமான அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்பட்டிருப்பது குறித்து ரஜினியே அமைதி காக்கும்போது கமல் அந்த ட்ரெயிலருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வெறும் விளம்பர ஸ்டண்டாகவே இருக்கிறது என்ற கருத்துக்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி1996ல் துவங்கி 2016 வரை அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன்  என்று சொல்வதைக் கிண்டல் செய்வது போல் இருந்தது. இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படத்தை அனைவரும் புறக்கணிக்கவேண்டும் என்று ஹேஷ்டேக் கிரியேட் பண்ணியும் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் ‘கோமாளி’ முன்னோட்டத்தைப் பார்த்த நடிகர் கமல்,  நேரடியாக பதிவு எதுவும் போடாமல் தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பதிவில், “நம்மவர் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றிய விமர்சனத்தைப் பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்குப் போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா.. நியாயத்தின் குரலா..” என்று தெரிவித்திருந்தார்.

திரைப்படத்தில் சொல்லப்படும் கருத்துகளுக்கு அரசியல்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது கருத்துரிமைக்கு ஆபத்து என்று திரையுலகினர் சொல்வார்கள்.அவ்வளவு ஏன் மற்ற அனைவரையும் விட இவ்வித சர்ச்சைகளால் கமலே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.இந்நிலையில் ரஜினி குறித்த ஒரு சாதாரண விமர்சனத்துக்காக நடிகர் கமலே அந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஜினி பற்றிப் பேசி சுயவிளம்பரம் தேடிக் கொள்கிறார் என்கிற விமர்சனங்களும் வருகின்றன.