கே.ஜி.எஃப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் தினேஷ் மங்களூர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
KGF Actor Dinesh Mangaluru Demise : பிரபல கலை இயக்குநரும், நடிகருமான தினேஷ் மங்களூர் இன்று காலமானார். குந்தாப்பூர் கோடேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கே.ஜி.எஃப், ஹரி கத அல்ல கிரி கத, ரிக்கி உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்த தினேஷ் மங்களூரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேஜிஎஃப் நடிகர் தினேஷ் மங்களூர் மறைவு
குந்தாப்பூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த தினேஷ் மங்களூர், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர் குந்தாப்பூரில் வசித்து வந்தார். ஆனால் கடந்த வாரம் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால், குந்தாப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏராளமான ரசிகர்களைக் கொண்ட தினேஷ் மங்களூர், பல நடிகர், நடிகைகளின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

அவரது உடல் இறுதி மரியாதைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து தினேஷ் மங்களூரின் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இந்த தகவல் அறிந்ததும், குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். கேஜிஎஃப் பட நடிகரின் மறைவு கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
