தி கேரளா ஸ்டோரி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Kerala CM criticizes The Kerala Story National award : 71வது தேசிய திரைப்பட விருதுகளில் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு வழங்கப்பட்ட விருதை முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளாவை அவமதிக்கும் மற்றும் வகுப்புவாதத்தை பரப்பும் படத்திற்கு விருது வழங்குவது இந்திய சினிமாவின் பாரம்பரியத்தை அவமதிக்கும் செயல் என்று அவர் கூறினார். இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் போட்டுள்ள பதிவில், “இந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் மலையாள சினிமா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஊர்வசி மற்றும் விஜயராகவன் சிறந்த துணை நடிகை மற்றும் துணை நடிகருக்கான விருதுகளை வென்றனர். இந்த விருதுகள் மலையாள சினிமாவை ஊக்குவிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கேரளா ஸ்டோரிக்கு தேசிய விருது - முதல்வர் எதிர்ப்பு

தொடர்ந்து கேரளா ஸ்டோரியை விமர்சித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “இருப்பினும், கேரளாவை அவமதிக்கும் மற்றும் வகுப்புவாதத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட படத்திற்கு விருது வழங்குவது இந்திய சினிமாவின் பாரம்பரியத்தை அவமதிப்பதாகும். வகுப்புவாதத்தை பரப்ப சினிமா ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். கலையை வகுப்புவாதத்தை பரப்புவதற்கான ஆயுதமாக மாற்றுவதை நாம் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய கேரளா ஸ்டோரி

கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதில் கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு அவர்கள் வெளிநாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டு கேரளா ஸ்டோரி படத்தை எடுத்திருந்தனர். இந்தப் படம் ரிலீஸ் ஆன போதே அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. அப்படத்திற்கு தடைவிதிக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன. கடும் எதிர்ப்புகளை மீறி வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட 71வது தேசிய விருதுகள் நிகழ்ச்சியில், கேரளா ஸ்டோரி படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை அப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென்னுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பிரசாந்தனு மெஹபத்ராவுக்கும் அறிவிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் மீண்டும் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.