கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அக்டோபர் 7-ந்தேதி குற்றப்பத்திரிகையை போலீசார் அங்கமாலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்க கோரி போலீசார் பரிந்துரை செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை பலாத்காரம்

கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்ேததி கேரள நடிகை படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, ஒரு கும்பல் அவரைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, அதை செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இது குறித்து நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

நடிகர் திலீப் கைது

பல்சர் சுனியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை கடத்தலுக்கு ஒரு நடிகருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், நடிகை கடத்தலுக்கு திட்டம் வகுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது அங்கமாலி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

5-வது முறையாக ஜாமீன்

நடிகர் திலீப் ஜாமீன் கோரி இதுவரை அங்கமாலி நீதிமன்றத்தில் 2 முறையும், உயர் நீதிமன்றத்தில் 2 முறையும் மனுத்தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் 3-வது முறையாக திலீப் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார், அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

முக்கிய துருப்பு கிடைக்கவில்லை

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், வழக்கின் முக்கியத் துருப்பாக இருக்கும் நடிகையை படம் எடுத்த செல்போன், அதன் மெமரிகார்டு ஆகியவை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை கிடைத்தால் போலீசாருக்கு கூடுதல் வலுவாக இருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த வீடியோ, மெமரி கார்டை எங்கு வைத்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

போலீசார் திட்டம்

இந்நிலையில், அக்டோபர் 7-ந்தேதி குற்றப்பத்திரிகையை அங்கமாலி மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நடிகர் திலீப் மீது சதித்திட்டம் தீட்டியது, கூட்டுபலாத்காரம் ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளை போலீசார் தரப்பில் நிரூபிக்கப்பட்டால், நடிகர் திலீப்புக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்கக்கூடும்.