மொழி சர்ச்சையில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது தக் லைஃப் படத்தை தடை செய்யுமாறு திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதுவேன் என அமைச்சர் சிவராஜ் எச்சரித்துள்ளார்.
Kamal Haasan Kannada Controversy : தமிழில் இருந்து கன்னடம் தோன்றியதாக நடிகர் கமல்ஹாசன் கூறியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் இந்த கருத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் சந்தோஷ் லாட், மது பங்காரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல் இப்படி பேசியிருக்கக் கூடாது என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
தக் லைஃப் படத்துக்கு தடை
இந்நிலையில், கன்னட மொழியை அவமதித்த கமல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் சிவராஜ் தங்கடகி, வலியுறுத்தி உள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நிலம், நீர், மொழி குறித்து யார் வேண்டுமானாலும் இழிவாகப் பேசுவது தவறு. கமல் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது படங்களைத் தடை செய்யுமாறு திரைப்பட வர்த்தக சபைக்குக் கடிதம் எழுதுவேன். கமல் பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். அனுபவமிக்க கலைஞரான அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது" என்றார்.

கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் மனதைப் புண்படுத்தும் எந்தக் கருத்தையும் ஏற்க முடியாது. கமலின் கருத்து கண்டிக்கத்தக்கது என அமைச்சர் சந்தோஷ் லாட் கூறினார். ஹூப்ளியில் பேசிய அவர், "எங்கள் மொழி, சுயமரியாதையைப் புண்படுத்தும் கருத்தை ஏற்க முடியாது. கமல் என்ன சொன்னார் என்று நான் பார்க்கவில்லை. ஆனால், இதுபோன்ற கருத்தை நான் கண்டிக்கிறேன்" என்றார்.
மன்னிப்பு கேட்க மறுக்கும் கமல்
சிமோகாவில் பேசிய அமைச்சர் மது பங்காரப்பா, "கன்னட மொழி பற்றி மற்றவர்களிடம் கற்கத் தேவையில்லை. கமல் எந்த அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கூறினார் என்பதைப் பார்க்கத் தேவையில்லை" என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், "கன்னடம் தமிழில் இருந்து தோன்றியது என்ற கமலின் அபத்தமான கருத்து, 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையைப் புண்படுத்தியுள்ளது" என்று கூறினார்.
இப்படி கர்நாடக மாநில அமைச்சர்கள் கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மறுபுறம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். நேற்று கொச்சியில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இவ்வாறு கூறினார்.
