நாடாளுமன்றத் தேர்தலில் போபால் தொகுதியில் பாலிவுட் நடிகை கரீனா கபூரை  நிறுத்த காங்கிரஸ் கட்சி ஏன் திட்டமிடுகிறது என்ற பின்னணி தெரியவந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் தயாராகிவருகின்றன.  வழக்கம்போல சினிமா நட்சத்திரங்களை களமிறக்கும் முயற்சியில் கட்சிகளும் ஈடுபட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இந்தி நடிகை கரீனா கபூரை போபால் தொகுதியில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி மேலிடத்துக்கு முன்வைத்துள்ளனர்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் தொடர்ச்சியாக 8 முறை போபால் தொகுதியில் பாஜகவே வெற்றி பெற்று வந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் பாஜக அத்தனை வலுவாக உள்ளது. ஆனால், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தை பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றிய பிறகு, போபால் தொகுதி மீதும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

என்றாலும், போபால் தொகுதியில் மிகவும் வலுவாக உள்ள பா.ஜ.கவை தோற்கடிக்க கரீனா கபூர் சரியான ஆளாக இருப்பார் என்றும் காங்கிரஸார் தெரிவித்துவருகிறார்கள். கரீனா கபூருக்கு இளம் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. போபாலில் கரீனா போட்டியிட்டால், இளைஞர்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்கின்றனர் காங்கிரஸார்.

 எல்லாம் சரி, இதற்கு கரீனா கபூர் தயாரா? இதுபற்றி கரீனா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “நான் அரசியலில் இணைய போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை. இதுகுறித்து யாரும் என்னிடம் அணுகவில்லை. என்னுடைய கவனம் முழுவதும் திரையுலகில் மட்டுமே இருக்கிறது, அது அப்படியே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

கரீனா கருத்துக்குப் பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை.  காங்கிரஸ் தலைமை பேசினால், நிலைமை மாறிவிடும் என்றும் மத்திய பிரதேச காங்கிரஸார் தெரிவித்திருக்கிறார்கள்.