உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 98-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்திய திரைப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
2026 Oscar awards : நீரஜ் கய்வானின் 'ஹோம் பவுண்ட்' திரைப்படம், 98வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியைக் கேட்டு படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, சமூக வலைதளத்தில் ஒரு உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
கரண் ஜோஹர் அந்த பதிவில், "'ஹோம் பவுண்ட்' படத்தின் பயணத்தைப் பற்றி நான் எவ்வளவு பெருமையாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் படத்தை எங்கள் ஃபிலிமோகிராஃபியில் பார்ப்பதில் நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம். எங்கள் அனைவரின் கனவுகளையும் நனவாக்கியதற்கு நீரஜ்-க்கு நன்றி. கேன்ஸ் முதல் ஆஸ்கர் தேர்வு வரை இது ஒரு அற்புதமான பயணம். ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் என் அன்பு. 'ஹோம் பவுண்ட்' நெட்ஃபிக்ஸில் ஒளிபரப்பாகிறது," என்று எழுதியுள்ளார்.
'ஹோம் பவுண்ட்' படத்தின் கதை என்ன?
'ஹோம் பவுண்ட்' ஆஸ்கர் வாக்கெடுப்பின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் 2026-ல் சர்வதேச திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட தகுதிபெற்ற கடைசி 15 படங்களில் இதுவும் ஒன்றாகியுள்ளது. 'ஹோம் பவுண்ட்' என்பது ஷோயப் (இஷான்) மற்றும் சந்தன் (விஷால்) ஆகியோரின் கதை. காவல்துறையில் சேர வேண்டும் என்ற இவர்களின் விருப்பம், அவர்களின் வாழ்க்கையையும் முடிவுகளையும் வடிவமைக்கிறது. இந்தத் திரைப்படம் நட்பு, கடமை மற்றும் இளம் இந்தியர்கள் மீதான சமூக அழுத்தங்கள் போன்ற கருப்பொருள்களைக் காட்டுகிறது. இதில் ஜான்வி கபூரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வேறு எந்தப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன?
98வது அகாடமி விருதுகளின் சர்வதேச திரைப்படப் பிரிவின் அடுத்த சுற்று வாக்கெடுப்புக்கு 15 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் அர்ஜென்டினாவின் 'பெலன்', பிரேசிலின் 'தி சீக்ரெட் ஏஜென்ட்', பிரான்சின் 'இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடென்ட்', ஜெர்மனியின் 'சவுண்ட் ஆஃப் ஃபாலிங்', ஈராக்கின் 'தி பிரசிடென்ட்ஸ் கேக்', ஜப்பானின் 'கொக்குஹோ', ஜோர்டானின் 'ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ', நார்வேயின் 'சென்டிமென்டல் வேல்யூ', பாலஸ்தீனத்தின் 'பாலஸ்தீன் 36', தென் கொரியாவின் 'நோ அதர் சாய்ஸ்', ஸ்பெயினின் 'சிராத்', சுவிட்சர்லாந்தின் 'லேட் ஷிஃப்ட்', தைவானின் 'லெஃப்ட்-ஹேண்டட் கேர்ள்' மற்றும் துனிசியாவின் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' ஆகியவை அடங்கும்.


