தமிழ் சினிமாவில், 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படங்கள் பல இருந்தாலும், 500 நாட்கள் ஓடி சாதனை படைத்த படங்கள் ஒரு சில படங்கள் மட்டுமே. 

கடந்த 1989 ஆம் ஆண்டு, நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை கனகா நடிப்பில், இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கரகாட்டகாரன்.  கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், காதலும், நகைச்சுவையும், கலந்து எதார்த்தமான படமாக இயக்கி இருந்தார் கங்கையமரன்.

இன்றைய கால கட்டத்தில் ஒரு திரைப்படம் ஒரு வாரம் திரையரங்குகளில் தாக்கு பிடிப்பதே கடினமாக உள்ள நிலையில்,  500 நாட்கள் அசராமல் ஓடி சாதனை படைத்தது 'கரகாட்டகாரன்'.  மேலும் இப்படம் நடிகர் ராமராஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதே போல் காமெடி வேடத்தில் நடித்திருந்த,  நடிகர் செந்தில் கவுண்டமணி, கோவை சரளா, ஆகியோரின் காமெடி காட்சிகளும் ரசிகர்களின் கை தட்டல்களை குவித்தன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தான பாரதி, சந்திரசேகர், காந்திமதி, ஜூனியர் பாலையா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்க இயக்குனர் கங்கை அமரன் முயற்சி செய்து வருகிறார். இந்த படத்திற்கும் முதல் பாகத்திற்கு இசை அமைத்த இசைஞானி இளையராஜாவின் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள கங்கை அமரன், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராமராஜன் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் ஒருவேளை சம்மதித்தால், இரண்டாம் பாகத்திலும் இவர்களின் நடிப்பை ரசிகர்கள் பார்க்கலாம். விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.