காந்தாரா படத்தில் நடித்த கன்னட நடிகர், டி. பிரபாகர் கல்யாணி மாரடைப்பால் மரணமடைந்துள்ளது படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Kantara Prabhakar Kalyani Death : காந்தாரா படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே அடுத்தடுத்து துயரச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தற்போது பிரபல கன்னட நாடகக் கலைஞரும், நடிகருமான டி. பிரபாகர் கல்யாணி மாரடைப்பால் காலமானார். உடுப்பியில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பிரபாகர் கல்யாணியின் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காந்தாரா படக்குழு விபத்துகளைச் சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த நவம்பரில் துணை நடிகர்களைக் கொண்டு சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இதையடுத்து இதில் நடித்து வந்த மலையாள துணை நடிகர் கபில் ஷூட்டிங் இடைவெளியில் ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர் நகைச்சுவை நடிகர் ராக்கேஷ் பூஜாரி காந்தாரா ஷூட்டிங் முடிந்து விழா ஒன்றில் கலந்துகொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சமீபத்தில், மிமிக்ரி கலைஞர் கலாபவன் நிஜு மாரடைப்பால் காலமானார்.

காந்தாரா பட நடிகர் மரணம்

இந்நிலையில் தற்போது டி. பிரபாகர் கல்யாணியும் மரணமடைந்துள்ளார். இதுதவிர ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட 30 பேர் படப்பிடிப்பின்போது படகு கவிழ்ந்து நீரில் விழுந்தனர். ஆனால், அனைவரும் காப்பாற்றப்பட்டனர். காந்தாரா படப்பிடிப்புத் தளத்தில் ஏற்கனவே ஒருமுறை பெரும் விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள காந்தாரா படத்திற்கு இனியாவது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காந்தாரா 2 திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரிஷப் ஷெட்டி உடன் ருக்மிணி வசந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இப்படத்தில் கனகவதியாக நடித்துள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது. காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.