காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்துள்ளது யார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
Kantara 2 Heroine Revealed : ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'காந்தாரா அத்தியாயம் 1' படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் 'கனகவதி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரமஹாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, படக்குழுவினர் அவரின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் பாராட்டுகளைப் பெற்ற 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
ரிலீசுக்கு ரெடியாகும் காந்தாரா 2
நாயகன் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளில் வெளியான அவரது முதல் தோற்றமும், அதைத் தொடர்ந்து வந்த படப்பிடிப்பு நிறைவு வீடியோக்களும் ஏற்கனவே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்போது 'கனகவதி' கதாபாத்திரத்தின் அறிமுகம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் அற்புதமான காட்சிகளுக்கு அரவிந்த் எஸ். கஷ்யப்பின் ஒளிப்பதிவும், பி. அஜனீஷ் லோக்நாத்தின் இசையும் உயிர் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் கிரகந்தூரின் ஹோம்பாலே பிலிம்ஸ், இந்திய கலாச்சாரத்தை எப்போதும் உயர்த்திப் பிடிக்கும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளை வெளிக்கொண்டு வரும் என்பதை இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது.
காந்தாரா 2 ஹீரோயினாக ருக்மிணி வசந்த்
'காந்தாரா அத்தியாயம் 1' படம் அக்டோபர் 2, 2025 அன்று கன்னடம் உட்பட தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கில மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது. வரமஹாலட்சுமி அம்மனின் அருளாசியுடன், ஹோம்பாலே பிலிம்ஸ் கனகவதியின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளது. இந்தக் கதாபாத்திரம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி எனது மட்டும் தெரிகிறது.
ʼசப்தசாகரதாச்சே எல்லோʼ படத்தில் நடித்திருந்த ருக்மிணி வசந்த், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். ʼபீர்பல்ʼ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், ரக்ஷித் ஷெட்டியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். ʼஅப்ஸ்டேர்ஸ்ʼ என்ற இந்திப் படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழிலும் ஏஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ருக்மிணி வசந்தின் தந்தை வசந்த் வேணுகோபால், இராணுவத்தில் பணியாற்றினார். அவரது தாய் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
